தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தை சேர்ந்த மாணவியும், ஸ்ரீசைலன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் . கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடைய காதல் பற்றி சாய்பிரியா பெற்றோரிடம் கூறியபோது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி காதலை கைவிடும்படி அறிவுரை கூறியுள்ளனர் . இதனைத் தொடர்ந்து காதலனுடன் பேசுவதை சாய்பிரியா தவிர்த்துவந்துள்ளார். மேலும் பெற்றோரும் ஸ்ரீசைலனை அழைத்து தங்கள் மகளுடன் இனி நீ பேசக்கூடாது என்று கூறி கண்டித்துள்ளனர் . அப்போது சாய்பிரியாவை திருமணம் செய்து வைக்குமாறு ஸ்ரீசைலன் கெஞ்சியும் அவர்கள் சம்மதிக்கவில்லை .
இந்நிலையில் கடந்த ஐந்தாம்தேதி சாய்பிரியாவை சந்தித்த ஸ்ரீசைலன் , ஒரே ஒருமுறை தம்முடன் வெளியே வந்து மனம் விட்டு பேசிய பிறகு நிரந்தரமாக பிரிந்து விடலாம் என்றும் அதன்பிறகு உன்னை சந்திக்கவே மாட்டேன் என்றும் கூறியுள்ளான் . இதனை நம்பிய சாய்பிரியா ஸ்ரீசைலனுடன் பைக்கில் சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் கவலை அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர் . அவரது செல்ஃபோனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் செய்வதறியாது தவித்தனர் .
மறுநாள் காலை சாய்பிரியாவின் செல்போனில் இருந்து அவரது தந்தைக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது . அதில் , அப்பா , நீங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீசைலன் உடனான காதலை கைவிட்டேன் என்றும் , தற்போது மற்றொருவரை காதலிக்கிறேன் என்றும் இதற்கும் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்கள் என்பதால் அவரை திருமணம் செய்ய ஐதராபாத் செல்வதால் தேடவேண்டாம் ‘ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது .
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மயிலார்தேவருபள்ளி காவல் துறையினர் புகார் செய்தனர் . புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சாய்பிரியாவின் செல்ஃபோன் சிக்னலை தொடர்ந்து கண்காணித்தது மட்டுமின்றி ஸ்ரீசைலனை சந்தேகத்தின்பேரில் நேற்று முன்தினம் பிடித்து தீவிரமாக விசாரித்தனர் . அப்போது தன்னை கைவிட்ட சாய்பிரியாவை ஸ்ரீசைலன் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கால்வாயில் புதைத்தது தெரியவந்தது.
இந்தச் சூழலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசைலன், தமது பேச்சை நம்பி வந்த சாய்பிரியாவை பைக்கில் முசாபேட்டா மண்டலம் கந்துரு கிராமம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றதாகவும் , அங்கு அவரிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதற்கு சாய்பிரியா மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் ஏற்பட்டது. எனவே சாய்பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்தேன். இதனை காவல் துறையிடம் தெரிவிப்பதாக சாய்பிரியா கூறியதால் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் ஸ்ரீசைலன் வாக்குமூலம் அளித்துள்ளான் .
பின்னர் சாய்பிரியாவின் உடலை தமது உறவினர் சிவா உதவியுடன் அங்குள்ள கால்வாயில் புதைத்ததாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து சாய்பிரியாவின் தந்தைக்கு பிரியாவின் மொபைலில் இருந்து வந்த மெசேஜ் குறித்து காவல் துறையினர் விசாரித்தனர்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீசைலன் இந்த கொலையில் தமக்கு தொடர்பு இல்லை என்பதை நம்ப வைக்க சாய்பிரியாவின் செல்ஃபோனில் இருந்து அவர் டைப் செய்தது போன்று தாமே அவரது தந்தைக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான் . இதையடுத்து கால்வாயில் புதைக்கப்பட்ட சாய்பிரியாவின் உடலை காவல் துறையினர் எடுத்து உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஸ்ரீசைலனையும் , அவனுக்கு உதவி செய்த சிவாவையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.