கடன் பிரச்னையில் பரிதாபம்; ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை: தக்கலை அருகே பரபரப்பு

குமாரபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் பிரச்னையால் ஜவுளிக்கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (47). பள்ளியாடி சந்திப்பில் ஜவுளி கடை நடத்தி வந்தார். அவரது மனைவி சோபா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 11, 12 வகுப்புகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரசாத்திற்கு தொழில் சம்பந்தமாக கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று இரவு வீட்டில் தனது அறைக்கு தூங்க சென்றார். இன்று காலை மனைவி அவரது அறைக்கு சென்றபோது, பிரசாத் பேனில் தூக்குபோட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதனை கண்ட மனைவி கூச்சலிட்டார். அவரது   சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பிரசாத்தின உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. பின்னர் இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அவரது மனைவி சோபா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கு காரணம் கடன் பிரச்னை தானா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜவுளி அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.