காணாமல்போன என்ஜினீயரிங் மாணவர் கழுத்தை அறுத்து கொலைசெய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் இலாம்பஜாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதுவும் சனிக்கிழமை தனது நண்பனாலேயே மாணவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிர்பும் மாவட்டத்திலுள்ள கோய்ராசோல் பகுதியிலுள்ள அஹ்மெத்பூர் என்ற இடத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் சையத் சாலுதீன்(19). இவர் துர்காபூரிலுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். சனிக்கிழமை மதியம் தனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற சையத் வீடு திரும்பவில்லை. அன்றிரவு சையத்தின் தந்தைக்கு ஒரு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த நபர் சையத்தை கடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.30 லட்சம் பணம் தரவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சையத்தின் தந்தையும் பணத்தை தயார் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். அதனையடுத்து சையத்தின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். சையத்தின் தந்தைக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை ட்ராக் செய்து போலீசார் இடத்தை கண்டறிய முற்பட்டுள்ளனர். அந்த செல்போன் எண்ணானது ஷேக் சல்மான் என்பவருக்கு சொந்தமானது என்பதையும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் சல்மான் மறைந்திருந்த இடத்தை சிலமணி நேரங்களில் கண்டுபிடித்த போலீசார் அவரை கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே சையத்தின் செல்போனை இலம்பஜாரின் சௌபஹாரியா காட்டுப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். சல்மானிடம் நடத்திய விசாரணையில் தனது நண்பனை தான் திட்டமிட்டு கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் இலாம்பஜார் பகுதியிலிருந்து சையத்தின் உடலை கண்டுபிடித்தனர். தற்போது சல்மானிடம் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM