
கவலைகளை மறந்து மக்களை சிரிக்க வைக்கும் ‛மகா கலைஞன்' வடிவேலு
கடந்த முப்பது வருடங்களாக ரசிகர்களின் மனதில் தனது யதார்த்தமான நகைச்சுவையாலும் என்றும் மறக்க முடியாத வசனங்களாலும், உடல்மொழியாலும் தனி இடம்பிடித்து இருப்பவர் நகைச்சுவை புயல் வடிவேலு. மதுரை மாவட்டத்தில் 1960ம் ஆண்டு செப்.,12ம் தேதி பிறந்த வடிவேலுக்கு இன்று 62வது பிறந்தநாள். சினிமாவில் வடிவேலு சாதித்த கதையை பார்க்கலாம்.
பள்ளிப் படிப்பு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறிய வயதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் நன்றாகவே நடிகர் வடிவேலுவிற்கு இருந்தது. தனது தந்தையின் மறைவிற்குப் பின் தற்செயலாக நடிகர் ராஜ்கிரணின் அறிமுகம் கிடைத்து அவருடைய அலுவலகத்தில் அவருக்கு உதவியாக ஆரம்ப காலங்களில் பணியாற்றினார்.
இதன்பின் 1991ம் ஆண்டு நடிகர் ராஜ்கிரண் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ்' சார்பில் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் 'என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்த படத்தில்தான் முதன்முதலாக வடிவேலுவிற்கு பிரதானமான நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு பாடலையும் பாடும் வாய்ப்பை கொடுத்து இவரை நகைச்சுவை நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் இவருடைய முதல் படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தார் ராஜ்கிரண்.

இதன் தொடர்ச்சியாக 1992ல் இயக்குநர் ஆர்வி உதயகுமார் இயக்கி, விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான 'சின்னக் கவுண்டர்' படத்தில் விஜயகாந்தின் உதவியாளராக பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதனை சரியாக தக்க வைத்துக் கொண்ட வடிவேலு அந்த காலகட்டங்களில் முன்னணி நாயகர்களாக விளங்கிய ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் போன்றவர்களின் படங்களில் நகைச்சுவையில் ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில் போன்றோருடனும் இணைந்து நடித்து தனக்கான இடத்தை வலுப்படுத்திக் கொண்டார்.
'சின்னக் கவுண்டர்' திரைப்படத்திற்குப் பிறகு இவருடைய பட எண்ணிக்கை பல மடங்காக பெருகியது. ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கும் பிஸியான நடிகர் பட்டியலில் இவரும் இடம் பெற்றார். இயக்குநர் சேரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான 'வெற்றி கொடி கட்டு' திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனோடு இணைந்து இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இவரை ரசிகர்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் இட்டு அமர வைத்தது.

இதனைத் தொடர்ந்து இதே பாணியில் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் 2003 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'வின்னர்' திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த 'கைப்புள்ள' கதாபாத்திரம் இவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். அனைத்து வயதினரையும் ரசிக்க வைத்த கதாபாத்திரம் இது என்றால் அது மிகையல்ல.
உடல் மொழி, முகபாவனை, வசன உச்சரிப்பு மற்றும் உடை என்று படத்திற்கு படம் பல வித்தியாசங்களை செய்து தமிழ் ரசிகர்களை தனது நகைச்சுவை நடிப்பால் வெகுவாக கவர்ந்த இன்றைய நகைச்சுவை நடிகர்களில் முதலாமானவர் நடிகர் வடிவேலு. 'ராஜகுமாரன்', “பாரதி கண்ணம்மா' 'பாட்டாளி' 'ப்ரண்ட்ஸ்' 'வின்னர்' 'கிரி' 'இங்கிலீஷ்காரன்' 'தலைநகரம்', “மருதமலை' 'சச்சின்' 'சந்திரமுகி' என இவருடைய நகைச்சுவை உச்சம் தொட்ட படங்களின் பட்டியல் இன்னும் நீளும்.
அதேப்போல் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர்களான “சூனா பானா' 'செட்டப் செல்லப்பா' 'தீப்பொறி திருமுகம்' 'நாய் சேகர்' 'ஸ்நேக் பாபு' 'பாடி சோடா' “அலாட் ஆறுமுகம்', ‛கைப்புள்ள' போன்ற பெயர்களை நினைத்துப பார்த்தாலே இவர் பேசிய வசனங்களும் இவருடைய உருவமும் நம் கண்முன் தோன்றி நம்மை நகைச்சுவைக்கு உள்ளாக்கும் என்றால் அது மிகையல்ல.

2006ல் இயக்குநர் சங்கர் தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கி வெற்றி பெற்ற திரைப்படமான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' என்ற படத்தின் மூலமாக தனது கதாநாயக அவதாரத்தையும் எடுத்தார் வடிவேலு. தொடர்ந்து “இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலி, எலி' போன்ற படங்களிலும் நாயகனாக நடித்தார்.
போட்டிக்கு பெரிய அளவில் ஆட்கள் இல்லாத நிலையில், வடிவேலுவின் திரையுலக வண்டி டாப் கியரில் சென்றுகொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக அரசியல் சர்ச்சைகளில் சிக்கி தனக்கான வனவாசத்தை வடிவேலு தானே தேடிக்கொண்டது தான் துரதிர்ஷ்டவசமானது. ஆனாலும் சினிமாவை பொறுத்தவரை அவர் தானாக ஒதுங்கவில்லை.. ஒதுக்கப்பட்டார். அதேசமயம் அப்படி ஒதுக்கப்பட்டது நிச்சயம் மார்க்கெட் சரிவால் அல்ல என்பது மட்டும் உண்மை.
ஏறக்குறைய 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இந்த அற்புதமான கலைஞன் ரஜினியிலிருந்து இன்றைய இளம் நாயகர்கள் வரை அனைவரோடும் நடித்துக் கொண்டு அவருடைய ரசிகர்களை திருப்தி படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் ட்ரோல் வீடியோ உருவாக்குபவர்களின் கடவுளாகவே மாறிவிட்டார் வடிவேலு. நான்கு படங்கள் சேர்ந்தாற்போல நடிக்காமல் விட்டாலோ, அல்லது சினிமாவில் ஒரு வருட இடைவெளி விட்டாலே கூட, அந்த கலைஞனை மக்கள் மறந்துவிடும் சூழலில், பத்து வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் (ஒதுக்கப்பட்ட) வடிவேலுவை ரசிகர்கள் ஒருபோதும் ஒதுக்கவே இல்லை என்பதுதான் ஆச்சர்யம். அடுத்தப்படியாக நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் மீண்டும் மக்களை சிரிக்க வைக்க வருகிறார் இந்த வைகை புயல்.
வடிவேலுவுக்கு ரசிகர்களாகிய நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம். அவர் நடித்த கதாபாத்திரங்கள் பெயர்களையும் பதிவிடலாம்.