அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டம் பொள்ளாச்சி வந்திருந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதை ஏற்றுக் கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாட்டு மக்களுக்கே அடையாளம் தெரியாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான்.
ஆனால், அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிமுக ஆட்சியல் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக பொய் சொல்கிறார். நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக கடைசி வரை போராடியது. திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் கூறினார்.
கமிஷன்.. கலெக்ஷன்.. கரப்ஷன் இதுதான் திராவிட மாடல். எல்லாத்துறைகளிலும் ஊழல் நடக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை, திருடி ரிப்பன் கட்டி திறக்கின்றனர். 12 சதவிகிதத்தில் இருந்து 52 சதவிகிதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இந்த உயர்வால், மாதம்தோறும் அரசுக்கு ரூ1,750 கோடி வருவாய் கிடைக்கும்.
ஆனால், மக்களின் கஷ்டங்களை கருதி அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தவில்லை. சொத்து வரியும் உயர்த்திவிட்டனர். அடுத்து பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தவுள்ளனர்.
விடியா அரசுக்கு மக்கள் படுகின்றன துன்பத்தைப் பற்றி கவலையில்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கே என்னை அடையாளம் தெரியாது என ஸ்டாலின் கூறுகிறார். எனக்கு எல்லா எம்.எல்.ஏ-களும் அடையாளம் தெரியும். மேடையில் உள்ள கூட்டத்தில் என்னை நசுக்கி எடுக்கின்றனர். இதுபோல ஒரு இடத்தில் அவரை பார்க்க முடியுமா.
ஒரு நசுக்கு நசுக்கினால் முடிந்துவிடும். அதிமுக-வில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள் பெயரையும் தொகுதியுடன் நான் சொல்கிறேன். அதேபோல திமுகவில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் பெயரையும் தொகுதியை குறிப்பிட்டு ஸ்டாலினால் சொல்ல முடியுமா. காகிதம் பார்க்காமல் சொல்ல வேண்டும்.
திமுக வரலாற்றில் செயல் தலைவராக இருந்த ஒரே நபர் ஸ்டாலின் தான். கருணாநிதி படுத்த படுக்கையாக இருந்தபோது கூட ஸ்டாலினை நம்பவில்லை. அதிமுகவில் அப்படி இல்லை. விவசாயி முதல்வராக முடியும். எடப்பாடி பழனிசாமி இல்லாவிடினும், இங்கு யார் வேண்டுமானாலும் முதல்வராக முடியும்.
அதைபோல திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என சொல்ல முடியுமா. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.” என்றார்.