புதுடெல்லி: சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார். ஏர்பேக் அணியாததால் அவர் இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் காரில் செல்பவர்கள் ‘ஏர்பேக்’ கட்டாயம் அணிய வேண்டும் என்றும், காரில் குறைந்தது 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். அந்த பதிவுடன் இணைக்கப்பட்ட வீடியோவில், புதியதாக திருமணமான பெண், தனது கணவருடன் காரில் ஏறிச் செல்கிறார்.
தனது கணவர் வீட்டிற்கு மகள் செல்வதை பார்த்து தந்தை உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடுகிறார். திடீரென அந்த வீடியோவில் தோன்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் (போலீஸ் அதிகாரி வேடம்), காரின் பாதுகாப்பு குறித்தும், ஆறு ஏர்பேக் வசதிகள் அந்த காரில் இல்லாததால் விபத்து ஏற்பட்டால் தப்பிக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கிறார். அதைகேட்ட தந்தை, இப்படிபட்ட காரில் எனது மகளை அனுப்பி வைத்தால், எனக்கு அழுகைதான் வரும் எனக்கூறுகிறார். உடனே ஆறு ஏர்பேக் வசதிகளுடன் கூடிய காரை தனது மகளுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்தக் காரில் புதுமணத் தம்பதிகள் பயணிக்கின்றனர். இவ்வாறாக இந்த வீடியோவில் ஆறு ஏர்பேக்கின் அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது.
ஆனால், நிதின் கட்கரி வெளியிட்ட இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிவசேனா தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி வெளியிட்ட பதிவில், ‘நிதின் கட்கரி வெளியிட்ட இந்த வீடியோ பதிவு, மிகவும் பிரச்னைக்குரிய விளம்பரமாகும். இதுபோன்ற வீடியோக்களை எடுத்து அனுப்புவது யார்? இந்த விளம்பரத்தின் மூலம் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும் என்று அரசு நம்புகிறதா? இதற்காக அரசின் பணம் செலவழிக்கப்படுகிறதா? அல்லது சட்டபடி குற்றமாக கருதப்படும் வரதட்சணையை ஊக்குவிக்கிறதா?’ என்று காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.