புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்று இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக கடந்த 9-ம் தேதி லடாக் சென்ற ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே இன்று டெல்லி திரும்பினார். டெல்லியில் மானெக்ஷா மையத்தில் நடைபெற்ற ராணுவத் தளவாடங்கள் குறித்த கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். லடாக்கில் தற்போது நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மனோஜ் பாண்டே, இரு நாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்டதற்கு இணங்க படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகக் கூறினார்.
லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்களைக் குவிக்கும் பணியில் இரு நாட்டு ராணுவமும் ஈடுபடத் தொடங்கின. ஆயுதங்களும் அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டன.
அதேநேரத்தில், பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிழக்கு லடாக்கின் முக்கிய முனைகளில் ஒன்றான கோக்ரா – ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவமும் படைகளை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, கடந்த 8-ம் தேதி காலை 8.30 மணி முதல் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியது. மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி இதனை தெரிவித்தார். படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை இன்றுடன் (செப்டம்பர் 12-ம் தேதியுடன்) நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், லடாக்கில் இந்திய படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 9-ம் தேதி அங்கு சென்ற ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.