அகமதாபாத்: டெல்லியை தொடர்ந்து தற்போது குஜராத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திலும் போலீஸ் சோதனை நடத்தப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் குற்றச்சாடு பதிவிட்ட நிலையில் அப்படி ஒரு சோதனை நடத்தவில்லை என்று போலீஸ் தரப்பில் பதில் ட்விட் போடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
24 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் உள்ள பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்து விடுவதில் குறியாக உள்ளது.
குஜராத் தேர்தல்
அதேபோல் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு ஆசிட் டெஸ்ட் ஆகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சூழலில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய ஆம் ஆத்மி தனது கவனத்தை குஜராத் பக்கம் திருப்பியுள்ளது. இதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது, பிரசாரத்தில் ஈடுபடுவது என இப்போதே தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
பழிவாங்கும் நடவடிக்கை
ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளித்தால் ஏராளமான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இப்படி ஒருபக்கம் ஆம் ஆத்மி பரபரப்பாக சென்று கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் அக்கட்சி தலைவர்களுக்கு எதிராக எழும்பி வருகின்றன. ஆனால், இதையெல்லாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறும் ஆம் ஆத்மி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதை கண்டு அச்சப்படும் பாஜக இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக பதிலடி கொடுத்து வருகிறது.
கட்சி அலுவலத்தில் சோதனை
இந்த நிலையில், குஜரத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்து இருக்கும் ஆம் ஆத்மி அலுவலகத்தில் போலீசார் திடீரென சோதனை நடத்தியதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவர் இசுடன் காத்வி தனது ட்விட்டர் பதிவில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இசுடன் கத்வி தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-
2 மணி நேரம் சோதனை
அரவிந்த் கெஜ்ரிவால் அகமதாபாத் வருகை தந்திருக்கும் நிலையில் அங்குள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் குஜராத் போலீசார் 2 மணி நேரம் சோதனை நடத்தியிருக்கின்றனர். எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் சோதனை நடத்த வருவதாக போலீசார் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர். ஆம் ஆத்மி கிடைக்கும் ஆதரவைக் கண்டு பாஜக அதிர்ந்து போயிருப்பதையே இது காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மிரண்டு போய்விட்டது
அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட் பதிவில் நேற்று கூறியிருப்பதாவது:- குஜராத் மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்திருக்கும் அளப்பறிய ஆதரவைக் கண்டு பாஜக மிரண்டு போயுள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவான அலை வீசுகிறது. டெல்லியை தொடர்ந்து தற்போது குஜராத்திலும் சோதனை நடக்கிறது. டெல்லியில் எதுவும் கிடைக்கவில்லை. குஜராத்திலும் எதுவும் கிடைக்காது. நாங்கள் நேர்மையானவர்கள், தேசபக்தி கொண்டவர்கள்” என்று கூறியுள்ளார்.
போலீஸ் மறுப்பு
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் எந்த சோதனையும் நடத்தவில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான குற்றச்சாட்டை தெரிவிப்பதாகவும் குஜராத் போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் போலியானவை என்றும், போலீசார் எந்த சோதனையும் அங்கு நடத்தவில்லை என்றும் குஜராத் போலீஸ் துறையின் டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.