குயில் பாட்டுக்கு சொந்தக்காரர் – ‛குரலரசி' சுவர்ணலதாவின் நினைவு தினம்

'ராக்கம்மா கையத் தட்டு, ஆட்டமா தேரோட்டமா' என ஆடவும், 'மாலையில் யாரோ, குயில் பாட்டு ஓ வந்ததென்ன' என ஏங்கவும், 'போவோமா ஊர்கோலம்' என துள்ளவும், பாடல்களை தந்த குரலரசி சுவர்ணலதாவின் நினைவு தினம் இன்று(செப்., 12)

தமிழ் திரையிசை உலகில் இசையாகவே வாழ்ந்து இளம் வயதிலேயே இசையிலேயே கரைந்து போனவர் பின்னணி பாடகி சுவர்ணலதா. கேரள மாநிலம் பாலக்காடில், கே.சி.சேருக்குட்டி – கல்யாணி தம்பதிக்கு மகளாக 1973 ஏப்ரல், 29ல் பிறந்தவர் சுவர்ணலதா. பாடகரும், ஆர்மோனிய கலைஞருமான தந்தையிடம் இசையின் நுணுக்கங்களை கற்றார்.

பின், 1987ல், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம், உயர்ந்த மனிதன் படத்தின், 'பால் போலவே' என்ற பாடலை பாடிக் காட்டினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் தயாரான, நீதிக்குத்தண்டனை படத்தில், பாரதியாரின், 'சின்னஞ்சிறு கிளியே' பாடலை பாட விஸ்வநாதன் வாய்ப்பளித்தார். அப்போது, சுவர்ணலதாவுக்கு வயது, 14. முதல்பாட்டிலேயே கே.ஜே.யேசுதாஸ் உடன் இணைந்து பாடினார். இளையராஜாவின் ஆஸ்தான பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா.

குரு சிஷ்யன் படத்தில் வரும் உத்தமபுத்திரி நானு என்ற பாடல் தான் இளையராஜா இசையில் சுவர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. அதன்பின் அவர் பாடிய பல பாடல்கள் செம ஹிட்டாகின. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடி புகழடைந்தார்.

“மாலையில் யாரோ மனதோடு பேச” பாடல் காதலில் விழுந்த ஒவ்வொரு பெண்ணின் தேசிய கீதமாக இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'கருத்தம்மா' படத்தில் இவர் பாடிய போறாளே பெண்ணுத்தாய் பாடல் தேசிய விருதை பெற்று தந்தது. 'அலைபாயுதே' படத்தில் ஸ்வர்ணலதா பாடிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் இன்றும் எங்கும் ஒலித்து கொண்டே இருக்கிறது.

இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 7000 பாடல்கள் பாடியிருக்கிறார். இளம் வயதிலேயே இசையிலேயே கரைந்து போனாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் பலருக்கு இனிய கீதமாக ரீங்காரமாய் ஒலித்து கொண்டே இருக்கிறது. நுரையீரல் பாதிப்பால், 2010ல் இதே நாளில்(செப்.,12) தன், 37வது வயதில் மரணமடைந்தார். அவர் மறைந்து இன்றோடு 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் காலத்தால் அழியாத பாடல்களில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சுவர்ணலதா.

சுவர்ணலதாவின் முத்தாய்ப்பான சில பாடல்கள்
* அடி ராக்கம்மா கைய தட்டு…
* மாலையில் யாரோ மனதோடு பேச…
* மாசி மாசம் ஆளான பொண்ணு…
* ஆட்டமா தேரோட்டமா…
* என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
* என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்…
* குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே…
* மலைக்கோவில் வாசலிலே…
* மல்லிகை மொட்டு….
* நீ எங்கே….
* சொல்லிவிடு வெள்ளி நிலவே…
* போறாளே பொண்ணுத்தாய்…
* முக்காலா முக்காபுல்லா…
* மாயா மச்சிந்திரா…
* மெல்லிசையே….
* பூங்காற்றிலே…
* எவனோ ஒருவன்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.