கண்ணூர்: கண்ணூரில் ஓடும் ரயில் மீது விஷமிகள் கற்களை வீசியதில் 12 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாரபட்சம் இன்றி விரும்புவது ரயில் பயணங்களை தான். அப்படிப்பட்ட சுவாரசியமான ரயில் பயணங்களை சில விஷம எண்ணங்களை கொண்ட மனிதர்கள் நாசமாக்கி விடுகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரயிலை தடம்புரளச் செய்வது; டிராக்குகளை மாற்றும் கருவிகளை உடைப்பது என இவர்கள் செய்யும் அட்டூழியம் ஆங்காங்கே நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
இதுபோன்ற ஒரு பரிதாபமான சம்பவம்தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது மனைவி ரஞ்சினி, மகள் கீர்த்தனா (12) ஆகியோருடன் கண்ணூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மங்களூர் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.
சிறுமி கீர்த்தனா வெளியே வேடிக்கை பார்ப்பதற்காக ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில், கண்ணூரின் தாலே சொவ்வா, எடக்காட் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்ற போது, திடீரென சிறுமி கீர்த்தனா அலறி துடித்தார். என்னவென்று பார்த்த போது அவரது இடது தலை பகுதியில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
அப்போதுதான், ரயிலின் மீது விஷமிகள் சிலர் கல் வீசியிருப்பது அங்கிருப்பவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, ரயிலை சங்கிலி பிடித்து இழுத்து பயணிகள் நிறுத்தினர். பின்னர், ரயில்வே போலீஸார் அங்கு வந்து சிறுமியை தலச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மங்களூர் – திருவனந்தபுரம் மார்க்கத்தில் இதுபோன்று ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மாதம் 30-ம் தேதி மங்களூரின் உலால் ரயில் நிலையம் அருகே வந்த ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை எச்சரித்து ரயில்வே போலீஸார் அனுப்பி வைத்தனர்.