கொழும்பில் தங்க விலை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 176,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் முன்னர் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 40 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையான விலை வரம்பிற்குள் இருந்தது.
இரண்டு இலட்சத்தை தொட்ட தங்க விலை
எனினும் நாட்டில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது ஒரு இலட்சம், பின்னர் ஒன்றரை இலட்சம் என தொட்டு இரண்டு இலட்சத்திற்கு வந்தது.
இந்த நிலையில் சில நாட்களின் பின்னர் 180,000 என்ற விலை வரம்பிற்குள் வந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 இலிருந்து 170,000 என்ற விலை வரம்பிற்குள் இருந்து வருகிறது.
என்ற போதும் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நிகழ்வு
இதேவேளை இலங்கையில் தங்க விலை தொடர் ஏறுமுகத்தை சந்தித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரியொருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவது செயற்கையான நிகழ்வு.
இதனால் தங்க கொள்வனவில் நுகர்வோர் ஆர்வம் காட்டாததன் காரணமாக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டதக்கது.
யாழில் தங்க விலை நிலவரம்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தின தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 176,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 162,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் தங்க நிலவரம்
தங்க விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் உலக சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில் தங்க விலை உயர்வினை சந்தித்துள்ளது.
தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும், சர்வதேச சந்தையில் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.