சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு தொடர்ந்து கண்காணித்து வந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை டான்யா வீட்டில் வைத்து தெய்வம் போல் வணங்கினார்.
அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி டான்யா இன்று வீராபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பினார் அப்போது அவர் இருக்கும் மோரை ஊராட்சி சார்பில் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டு அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் டான்யாவின் பள்ளி நண்பர்கள் அனைவரும் ஆர்வத்துடன் டான்யவை காண வந்தனர்.
அப்போது டான்யாவுக்கு பூ கொடுத்து வரவேற்ற நண்பர்களுக்கு டான்யா இனிப்பு வழங்கினார். மோரை ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதோடு டான்யாவின் குடும்பத்திற்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களையும் வழங்கினார்.
அவர் இருக்கும் தொகுதியான மாதாவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சிறுமி அறைக்கு ஏசி மற்றும் கட்டில் மெத்தை வாங்கி கொடுத்துள்ளார். குறிப்பாக சிறுமியின் வீட்டில் முதல்வரின் புகைப்படத்தை மாட்டி வைத்து எங்களுக்கு இவர்தான் தெய்வம் என வணங்கி வீட்டிற்குள் நுழைந்தனர்.
டான்யா வீடு திரும்பியது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் முகச் சிதைவால் பாதிக்கப்பட்ட டான்யா இப்பகுதியில் வலம் வருவதை கண்ட தங்களுக்கு மன வருத்தமாக இருந்தது. நலம் விசாரித்தால் குழந்தை மனது பாதிக்கப்படுமோ என எதுவும் கேட்கவும் மாட்டோம். தற்போது அவள் குணமாகி இயல்பாக வந்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி என தெரிவித்தனர்
இதுகுறித்து தாய் சௌபாக்யா கூறுகையில்.. டான்யாவின் தோழிகள் அவளை பார்த்ததும் ஆசையாக பேசுகின்றார்கள். அதேபோல் இது டான்யாவா என ஆச்சரியமுடன் பார்க்கின்றார்கள் மன வருத்தத்துடன் சென்ற நாங்கள் தற்போது மகிழ்ச்சியாக மீண்டும் நலம் பெற்று வீடு வந்துள்ளோம். இதற்கு உதவிய தமிழக முதல்வர் தமிழக அரசு மற்றும் புதிய தலைமுறைக்கும் தாய் நிகழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM