தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. யாராலும் கண்டுகொள்ளப்படாத, ஒதுக்கப்பட்ட களமும், மனிதர்களுமே இவரது திரைப்படங்களில் இடம்பெறும். பத்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் பாலா இதுவரை பல விருதுகளை வென்றிருக்கிறார். கடைசியாக அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா படத்தை இயக்கினார்.ஆனால், படம் திருப்தி தராததால் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை வைத்து மீண்டும் வர்மா படத்தை இயக்க வைத்தது தயாரிப்பு தரப்பு. மிகச்சிறந்த படைப்பாளியான பாலாவுக்கா இந்த கதி என பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
அதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த பாலா சூர்யாவுடன் இணையவிருப்பதாக அறிவித்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துவருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்த சூழலில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கவிருக்கிறது.
இந்தச் சூழலில் இயக்குநர் பாலாவின் பிறந்தநாளான ஜூலை 11ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்துக்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு சூர்யாவும், பாலாவும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
vanangaan songs recording on progress… @Suriya_offl @rajsekarpandian #directorbala
— G.V.Prakash Kumar (@gvprakash) September 11, 2022
இந்நிலையில் வணங்கான் படத்தின் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணங்கான் படத்தின் பாடல்களை ரெக்கார்ட் செய்யும் பணி தொடங்கியது” என குறிப்பிட்டுள்ளார்.
வணங்கான் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.