கரூர்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தெரிவித்தார்.
மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தப்போது வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வலியுறுத்தி கரூர் மாவட்ட பாஜக சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (செப்.12) ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் பாஜகவினரை கைது செய்வதற்காக கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காலை 6 மணி முதலே குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களை அழைத்து செல்ல போலீஸ் வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. இதேபோல் பாஜக அலுவலகம் அமைந்துள்ள திண்டுக்கல் புறவழிச்சாலை அருகே அவர்கள் அலுவலகத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் நடத்த வெளியே சென்றால் அவர்களை கைது செய்ய போலீஸார் குவிக்கப்பட்டு, காவல் துறை வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.
பாஜக கரூர் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் கரூர் மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் செந்தில்பாலாஜி பதவி விலகவேண்டும் என தெரிவித்தோம். இதுகுறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினர் அமைச்சர் பதவி விலகவேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.
கரூரில் அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி இன்று (செப்.12) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றிருந்த நிலையில், நேற்றிரவு கரூர் டிஎஸ்பி கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் செப்.5 முதல் செப்.20 வரை கரூர் வட்டாட்சியர் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதில்லை என்றும். ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும். அரசு அலுவலகங்கள் இருப்பதால் அவர்களது பணிகள் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற அனுமதி பெற்று கரூரில் கண்டிப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். நடத்திக் காட்டுவோம். யாராலும் ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க முடியாது. ஆர்ப்பாட்டம் மாநில அளவில் நடைபெறவும் வாய்ப்புள்ளது. கரூர் ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது. ஆர்ப்பாட்டத்தை நடத்திக் காட்டுவோம். யாராலும் தடுக்க முடியாது. இன்று நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களிலிருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் பங்கேற்க பேருந்து, கார், இரு சக்கர வாகனங்களை வருபவர்களை சோதனை நடத்தி கைது செய்து வருகின்றனர். ராணுவ கட்டுப்பாடு போல உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர்கள் குறுநில மன்னர்களாக செயல்படுகின்றனர்.
பாஜக ஒன்றியத் தலைவர்கள் வீடுகளுக்கு சென்று வெளியே வந்தால் கைது செய்வோம் என போலீசார் மிரட்டியுள்ளனர். அமைச்சருக்கு பயம் ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியுள்ளார். பாஜக வளர்ந்து வருகிறது. பாஜக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அமைச்சர் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.
கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை, சாக்கடை பணிகள் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டுள்ளோம். மேற்கண்ட அனைத்து பணிகளையும் அமைச்சரின் பினாமி ஒருவரே மேற்கொண்டு வருகிறார். அதேபோல் சவுடு மண் எடுத்து ஒருவர் விற்பனை செய்து வருகிறார். கரூர் மாநகர தெற்கு நகரம் குட்கா, மத்திய நகரம் டாஸ்மாக், கரூர் வடக்கு லாட்டரி சீட்டு என பிரித்துக்கொண்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக பாஜக அலுவலகம் அருகே, வட்டாட்சியர் அலுவலக பகுதிகளில் 200, 300 போலீசாரை குவித்துள்ளனர்.
ஊழல்கள் நடந்தால் தட்டிக்கேட்போம். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே இந்த ஆட்சி. ஊழல்கள் நடந்தால் தட்டிக் கேட்போம். அதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது” என்றார்.
பேட்டியை தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலகக் கோரி பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து ஏடிஎஸ்பி ப.கண்ணன், டிஎஸ்பி கு.தேவராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தோம் என கூறி பாஜகவினர் கட்சி அலுவலகத்திற்குள் சென்றனர். போலீஸார் தொடர்ந்து பாஜக அலுவலகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.