சென்னை: தங்கக் கடத்தல் குருவிக்கு உதவிய காவலர்… சிக்கிய பின்னணி என்ன?

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள லாட்ஜில் சில நாள்களுக்கு முன்பு சிலரைஅடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக லாட்ஜ் ஊழியர்கள் அரும்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் மற்றும் அவரின் தம்பிகளை மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது கடந்த 7-ம் தேதி ஆனந்த்ராஜ் துபாயிலிருந்து சென்னைக்கு வந்துள்ளார். அப்போது அவர் 450 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

கைது

ஆனால் அந்தத் தங்கத்தைக் கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கவில்லை என்று தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த தங்கக் கடத்தல் கும்பல் ஆனந்த்ராஜை லாட்ஜில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. ஆனந்த்ராஜ் அளித்த தகவலின்படி இதயதுல்லா, பாலகன், ஆற்காட்டைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ரவிக்குமார், தினேஷ், நவீன் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் விமல், அவரின் நண்பர்கள் ஸ்ரீதர், மைக்கேல் ஆகியோரையும் போலீஸார் கடத்தல் வழக்கில் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சென்னை அரும்பாக்கம் லாட்ஜில் ஆனந்தராஜ் மட்டுமல்லாமல் அவரின் தம்பிகள் ஷியாம், மைக்கேல் ராஜ், குமார் ஆகியோரையும் கடத்தல் கும்பல் அடித்து துன்புறுத்தியுள்ளது. அறையில் அவர்களை அடைத்து வைத்து கை, கால்களை கட்டி சித்ரவதை செய்துள்ளது. அவர்களை மீட்டு விசாரித்தபோதுதான் தங்கக் கடத்தல் குறித்த தகவல் தெரியவந்தது. ஆனந்த்ராஜ் குருவியாகச் செயல்பட்டுள்ளார். தங்கத்தை கடத்தி வந்த ஆனந்தராஜ், அதை உரிய நபரிடம் கொடுக்கவில்லை. அதனால்தான் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

கடத்தல் தங்கம்

இந்த நிலையில் ஆனந்த்ராஜிடமிருந்த தங்கம், காவலர் விமல் மூலம் அவரின் நண்பர்கள் ஸ்ரீதர், மைக்கேல், வினோத் என அடுத்தடுத்து கைமாறியுள்ளது. அரக்கோணத்தில் உள்ள வினோத் வீட்டிலிருந்து 450 கிராம் தங்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இந்த வழக்கில் காவலர் விமல் உட்பட 8 பேரைக் கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கில் தங்கத்தை கடத்தி வரச் சொன்னவரைத் தேடிவருகிறோம். காவலர் விமல் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.