சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று மாலை சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மாலை அணிவிக்க அனுமதிக்க கூடாது என எம்எல்ஏ போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதிமுகவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு இரு பிரிவாக பிரிந்துள்ளனர். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்த நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை தன் பக்கம் கொண்டு வர ஓபிஎஸ் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இச்சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பிற்கு யாரும் சென்று விடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை மற்றும் சேலத்தில் இருந்தபடி எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சசிகலா, சேலம் மாவட்டத்தில் இன்று (12ம் தேதி) அரசியல் புரட்சிப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதற்காக விழுப்புரத்தில் இருந்து சேலம் மாநகருக்கு மாலை 3 மணிக்கு வருகிறார். பின்னர், சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணாபூங்கா வளாகத்தில் இருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்திற்கு வருகிறார். அங்கு மாலை 4 மணிக்கு இருவரது சிலைக்கும் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசுகிறார்.
இந்நிலையில் ஆத்தூர், தலைவாசல், வீரகனூர் பகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆத்தூர் டவுன், தலைவாசல், வீரகனூர் போலீசில் அதிமுக நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர்.
ஆத்தூர் அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கரன் இன்று காலை ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், “ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் நகராட்சியில் ராசிபுரம் பிரிவு சாலையில் எம்ஜிஆர் முழுவுருவ சிலை உள்ளது. இச்சிலை எனது சொந்த செலவில் அமைக்கப்பட்டதாகும். இந்நிலையில், அதிமுகவிற்கு சிறிதும் தொடர்பு இல்லாத சசிகலா என்பவர் இன்று எனது சொந்த செலவில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வர இருப்பதாக கேள்விப்பட்டேன். இதனை நானோ, எனது இயக்கத்தை சார்ந்தவர்களோ நிச்சயம் அனுமதிக்கமாட்டோம்.
எந்தவொரு பிரச்னையும், கலவரமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் எனது தொகுதிக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் சசிகலா முயற்சிப்பதாக தெரிகிறது. பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில், சசிகலாவின் செயலுக்கு அனுமதி அளிக்காமல் அமைதிநிலை நாட்ட கேட்டுக்கொள்கிறேன்’’ எனக்கூறியுள்ளார். இதேபோல், ஆத்தூர் நகர செயலாளர் மோகன், தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால், சேலம் மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.