பானாஜி: நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகட் மர்ம மரணம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரை செய்துள்ளார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜனதாவை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கூட்டாளிகள் 2 பேருடன் கோவா சென்ற நிலையில் அங்கு நடந்த பார்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.
சாவில் மர்மம்
அவரது சாவில் உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில், கோவாவிற்கு சோனாலி போகட்டுடன் சென்றிருந்த இருவர் தான் கொலை செய்திருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி ஆகிய இருவரிடமும் முதற்கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கோவாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் நடந்த ஒரு பார்ட்டியின் போது சோனாலி போகட்டுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்ததாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
உடலில் ரத்த காயங்கள்
அந்த ரெஸ்ட்ராண்டில் போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது அதன் கழிவறையில் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியிருந்தனர். சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சோனாலி போகட்டின் உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவாகாரம் குறித்து பாஜக கூட்டணி கட்சியினர் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் இந்த வழக்கில் உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின. நடிகை மர்ம மரணம் தொடர்பாக போலீசார் இதுவரை 5 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை குடும்பத்தினர் வலியுறுத்தல்
இதற்கிடையே இந்த கொலை நடந்த மறுநாளே அரியானா முதல்வரை சந்தித்த சோனாலி போகத் குடும்பத்தினர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். எனினும், இந்த வழக்கின் விசாரணை மிகவும் நியாயமாக நடப்பதாக கோவா முதல்வர் பிரமோந்த் சவான் கூறியிருந்தார். எனினும், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்று அவருக்கு தொடர் அழுத்தங்கள் வந்தன. இதனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுத இருப்பதாக கூறியிருந்தார்.
சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை
இந்த நிலையில், சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்பதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த வழக்கின் விசாரணையை விரைவில் சிபிஐ எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. சிபிஐ விசாரணையின் மூலம் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியில் வரும் என எதிர்பார்க்கபப்டுகிறது.