உத்தரபிரதேசத்தில் டார்ச்லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனர்.
டார்ச்லைட் வெளிச்சத்தில் ஒரு மருத்துவர் ஒரு பெண் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து பரிசோதிப்பதும், மற்றவர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதையும் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஜெனரேட்டரில் பொருத்தப்படும் பேட்டரி அடிக்கடி திருடப்படுவதால், தேவைப்படும் போது அவை பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Facing Power Cut, UP Doctors Treat Patients Using Mobile Torch https://t.co/qJZbmsIeB8 pic.twitter.com/QVzcVoYDkn
— NDTV (@ndtv) September 11, 2022
இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் தலைமைப் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.டி.ராம் கூறுகையில், “ஜெனரேட்டருக்கான பேட்டரிகளைப் பெறுவதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெனரேட்டரில் பேட்டரி திருடுபோகும் என்ற பயம் எப்போதும் உண்டு. எனவே அவை பயன்பாட்டில் இல்லாதபோது அகற்றப்படும். மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருக்கிறது. ஆனால் பேட்டரிகளைப் பெறுவதற்கு நேரம் எடுத்தது” என்று அவர் கூறினார்.
அதே வேளையில் மருத்துவனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், மருத்துவமனை நிர்வாகம் பொதுவாக ஜெனரேட்டரைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM