லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் சென்று வழிபட உரிமை கோரிய இந்து பெண்கள் மனு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அதன் சுவரில் இந்து கடவுளின் சிலை இருப்பதாகவும், அங்கு தினமும் வழிபட அனுமதி கோரியும் 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
அந்த ஆய்வில் மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்ததாக மனுதாரர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மசூதியில் குறிப்பிட்ட பகுதியை மட்டம் சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மசூதியில் வழிபட அனுமதி கோரிய வழக்குக்கு எதிராக அஞ்சுமன் இஸ்லாமியா மஸ்ஜித் குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பளிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் இன்று தீர்ப்பினை வழங்கினார்.
அதில் இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செப்டம்பர் 22ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தது. இந்த தீர்ப்புக்கு வாரணாசியை சேர்ந்த இந்து சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளது. அங்கு கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லாக இந்த தீர்ப்பு இருக்கும் என தெரிவித்துள்ளனர்.