உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வாரணாசி ஞானவாபி மசூதிக்குள் இருக்கும் இந்து சிலைகளை வழிபட அனுமதி கோரி இந்து பெண்கள் தொடர்ந்த மனு விசாரணைக்கு உரியது என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மசூதி தரப்பு வைத்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.