வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, ‘வீடியோ’வாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது மாவட்ட நீதிமன்றம் முதலில் விசாரணை நடத்தி வந்தது.
இதில் இரு தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (செப்.,12) வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் தீ்ர்ப்பளித்தது. மேலும், வழக்கு விசாரணை செப்.,22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement