அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவாகும் என்று கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் முகலாயர்கள் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்தது. இதனிடையே, இந்த மசூதி அமையப் பெற்றுள்ள இடத்தில் ராமர் கோயில் இருந்தததாகவும், அந்தக் கோயிலை இடித்துவிட்டு தான் அங்கு மசூதி எழுப்பபட்டதாகவும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின.
மேலும், அங்கு மீண்டும் ராமர் கோயிலை எழுப்ப வேண்டும் எனவும் அவை வலியுறுத்தி வந்தன. இதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாபர் மசூதி இடிப்பு
இந்த சூழலில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்தனர். இது அயோத்தியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட முயற்சிகள் நடந்தன. ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றதால் அங்கு ராமர் கோயில் கட்ட முடியவில்லை.
இறுதி தீர்ப்பு
இதனிடையே, அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ராமர் கோயிலை கட்டமைக்க உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம்
இந்தக் குழுவின் மேற்பார்வையில்தான் தற்போது அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. வரும் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமர் கோயில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகத்தினர் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ரூ.1,800 கோடி செலவு
அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் முக்கியமான இந்து மத குருமார்கள் மற்றும் ராமாயணத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை சிலைகளாக வடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதேபோல, கோயில் கட்டுமானத்திற்கு தோராயமாக ரூ.1,800 கோடி செலவாகும் என கூட்டத்தில் கணக்கிடப்பட்டது. வரும் 2023-ம் ஆண்டு டிசம்பரில் கட்டி முடிக்கப்படும் இந்தக் கோயிலில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் ராமர் சிலையை நிறுவ அறக்கட்டளை நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.