தாதாக்கள், போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களில் தீவிர விசாரணை

புதுடெல்லி: தீவிரவாதிகள், தாதாக்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் இடையே வளரும் நட்பை உடைக்கவும், நிதி ஆதாரங்களை தடுக்கவும் 50 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நாட்டில் சமீப காலமாக தீவிரவாதிகள் நடமாட்டம், தாதாக்களின் அட்டகாசம் (கேங்ஸ்டர் கும்பல்), போதை பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து உள்ளது. இதனால் குண்டுவெடிப்புகள், கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெரும்பாலும் கொலை செய்யும் நபர்கள் போதை பொருட்களை உட்கொண்டுதான் கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர். சில தாதாக்கள் வெளிநாடுகளில் இருந்தும், சிறையில் இருந்தும் தங்கள் கூட்டாளிகள் மூலம் முக்கிய பிரமுகர்களை சுட்டுக்கொல்வது, பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்வது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில தாதாக்கள் தொழிலதிபர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள் குறிவைத்து மிரட்டி பணம் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற பல கும்பலின் தலைவர்கள் மற்றும் கூட்டளிகள், இப்போது  பாகிஸ்தான், கனடா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில்  இருந்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு குற்றசம்பவங்களில் ஈடுபடும் தீவிரவாதிகள், தாதாக்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் இடையே புதிய தொடர்பு உருவாகி அதை வளர்த்து வருகின்றனர். இந்த தொடர்பு உள்நாட்டில் மட்டும் இல்லாமல், வெளிநாட்டிலும் வளர்த்து வருகின்றனர். இதுகுறித்து ரகசியமாக கண்காணித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததன்பேரில் கடந்த மாதம் 26ம் தேதி வழக்குபதிவு செய்தனர்.  

இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் செயல்பட்டு வரும் தாதாக்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் இடையே வளர்ந்து வரும் நட்பை உடைக்கவும், அவர்களில் நிதி ஆதாரங்களை தடுக்கவும் வகையில் பாசில்கா, பேர்ட்கோட், முக்த்சர் சஹாப், மோகா, தரன் தாரன், அமிர்தசரஸ்,  லூதியானா, சண்டிகர், மொஹாலி, கிழக்கு குருகிராம், பிவானி, யமுனா நகர்,  சோனேபட் மற்றும் ஜஜ்ஜார், ஹனுமன்கர், ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டம்,  துவாரகா, புறநகர் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மற்றும் டெல்லி-என்சிஆரின்  ஷாஹ்தாரா மாவட்டங்கள் என டெல்லி மற்றும் 3 மாநிலங்களில் உள்ள 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று என்ஐஏ அதிரடி சோதனை நடத்தியது.

சோதனை பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலையில் தொடர்புடைய கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார், லாரன்ஸ் பிஷ்னோய், ஜக்கு பகவான்பூரியா, கலா ராணா (எ) வரீந்தர் பிரதாப், கலா ஜாதேடி, விக்ரம் பிரார், கவுரவ் பாட்டியல் (எ) லக்கி பாட்டியல், நீரஜ் பவானா, கௌஷல் சவுத்ரி, தில்லு  தாஜ்பூரியா, அமித் தாகர், தீபக் குமார் என்ற டினு, பந்தர் என்கிற சந்தீப்,  உமேஷ் (எ) கலா, இர்பான் என்கிற சீனு பஹல்வான், ஆஷிம் என்ற ஹாஷிம் பாபா,  சச்சின் பன்ஜா மற்றும் பலருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.