போபால்: பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் பி.கே.சிங், வட மாநிலங்களில் உள்ள தேவாலயங்களின் (சிஎன்ஐ) பிஷப்பாக உள்ளார். இவர் சிஎன்ஐ-க்கு சொந்தமான ஜிம்கானா கட்டிடத்தை ரியாஸ் பாட்டி என்பவருக்கு கடந்த 2016-ல் ரூ.3 கோடிக்கு குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது.
மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்ற வாளியான தாவூத் இப்ராஹிமுக்கு ரியாஸ் மிகவும் நெருக்கமானவர் என தெரிய வந்தது. இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் சமூக ஆர்வலர் நிலேஷ் லாரன்ஸ், மத்திய பிரதேச பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். இதுதவிர, பிரதமர் அலுவலகம், அமலாக்கத் துறையிலும் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், பி.கே.சிங்குக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் ம.பி. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் ரூ.2 கோடி (வெளிநாட்டு கரன்சி உட்பட) ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, பாதிரியார் பி.கே.சிங்குக்கு தாவூத் இப்ரா ஹிமுடன் தொடர்பு இருக்கிறதா என மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் விசா ரணை நடத்தி வருகின்றன.
மும்பையின் வெர்சோவா பகுதியைச் சேர்ந்த ரியாஸ் மீது மிரட்டி பணம் பறித்தல், நில மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.