உட்கட்சித் தேர்தல் வேகமெடுத்துள்ளது. திமுக தலைவராக நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளார்
. ஆனால் தனது கட்சியின் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வது விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
பெரியளவில் புகார்கள் இல்லை என்றால் பழைய நிர்வாகிகளை மாற்ற வேண்டாம் என்பது தான் தலைமையிடமிருந்து சென்ற உத்தரவு என்கிறார்கள். ஆனால் பல மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள், சாதிக்காரர்கள், சொந்தக்காரர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கட்சிப் பணி ஆற்றியவர்களை ஓரங்கட்டுவதாக தலைமைக்கு புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன.
அப்படியொரு சிக்கலில் தான் சென்னை வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் சிக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
இதுகுறித்து திமுக வட்டாரத்திலும், திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளிலும் விசாரிக்கும் போது முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.
நிர்வாக வசதிக்காக 2020ஆம் ஆண்டு தான் சென்னை வடகிழக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது மாதவரம், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
இந்த பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தலித் உள்ளிட்ட பிற சமூக நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார் வாசிக்கின்றனர் கட்சிக்கு உழைத்த நிர்வாகிகள்.
தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பிய நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இந்த புகாருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி மாதவரம் சுதர்சனத்தை அழைத்ததாக தெரிகிறது. அதற்கு தனக்கு உடல் நலமில்லை என்றும், சரியான பின்னர் சந்திப்பதாகவும் சுதர்சனம் பதில் அளித்துள்ளதாக சொல்கிறார்கள்.
சில நாள்களுக்குப் பின்னர் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அழைத்த போது, தனது மனைவிக்கு உடல்நலமில்லை என்று கூறி தவிர்த்துள்ளார். இதனால் திமுக தலைமை சுதர்சனம் மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் விரைவில் அவர் மாற்றப்படுவார் என்றும் கூறுகின்றனர் திமுகவில் உள் விவகாரம் அறிந்தவர்கள்.