தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக கே.பாக்யராஜ் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் ரைட்டர்களின் தனித்துவமான சங்கமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் இருக்கிறது. உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும் போதெல்லாம் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தைத்தான் நம்பிக்கையுடன் நாடுவார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடப்பது வழக்கம். நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததால், நேற்று மீண்டும் தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 485 வாக்குகளில் 346 வாக்குகள் பதிவாயின. நேற்றே வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கே.பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
சங்கத்தில் மொத்தம் உள்ள 21 பொறுப்புகளில் 10 பொறுப்புகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அணியும், மீதமுள்ள 11 பொறுப்புகளுக்கு பாக்யராஜ் அணியும் என சரிபாதியாக வெற்றி பெற்றனர். பாக்யராஜ் அணியைச் சேர்ந்த லியாகத் அலிகான் செயலாளர் ஆகவும், பாலசேகரன் பொருளாளர் ஆகவும் வெற்றி பெற்றனர்.
துணைத்தலைவர்களாக ரவிமரியாவும் (எஸ்.ஏ.சி. அணி), யார் கண்ணனும் வெற்றி பெற்றனர். இணைச் செயலாளர்களுக்கான 4 பேர்களில் எஸ்.ஏ.சி. அணி சி.ரங்கநாதன், வி்.பிரபாகரும் பாக்யராஜ் அணியைச் சேர்ந்த மங்கை ஹரிராஜன், கவிஞர் முத்துலிங்கமும் வென்றார்கள்.
இதனைத் தவிர, செயற்குழு உறுப்பினர் 12 பேர்களில் எஸ்.ஏ.சி. அணியின் பேரரசு, சரண், விவேகா, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி மற்றும் ராதாரவி ஆகியோரும் பாக்யராஜ் அணியின் வேட்பாளர்களான பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன் பாலா, ஹேமமாலினி மற்றும் ராஜா கார்த்திக் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
பாக்யராஜ் அணியினர் வாக்குறுதிகளில் ”பாரம்பரியமிக்க நமது எழுத்தாளர் சங்கத்தில் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வரும் கதைப் பதிவு இனியும் அப்படியே தொடரும். இதுதொடர்பாக வேறு எந்த சங்கத்துடனும் பேசி முடிவு செய்யவேண்டிய அவசியமில்லை. இந்த உரிமைக்காக எந்த அமைப்பிற்கும் எதிராக போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். என்றும், ஏற்கெனவே நமது சங்கம் சொந்த கட்டடத்தில் தான் இயக்கி வருகிறது என்றாலும் சற்று வசதியுடன் கூடிய புதிய கட்டடம் கட்டத் திட்டமிடப்படும்” என்று சொல்லியிருந்தது வெற்றிக்கு ஹைலைட்டாக அமைந்தது என்கிறார்கள்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!