'நானும் நடிகனாகியிருப்பேன்'… அமைச்சர் துரைமுருகன் சுவாரசிய பேச்சு

அகநானூறு புத்தகத்துக்கு சாலமன் பாப்பையா எழுதிய உரை நூல் புத்தக வெளியீட்டு விழா நேற்று வேலூர் சன்பீம் தனியார் பள்ளியில் நடைபெற்றுது. இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பேராசிரியர் சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் பேச்சாளர் ராஜா பள்ளியின் தாளாளர் ஹரி கோபாலன் மற்றும் தங்க பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அகநானூறு உரைநூலை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேராசிரியர் சாலமன் பாப்பையா வெளியிட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன் கூறியதாவது; இன்று நான் டென்மார்க்கிற்க்கு சென்று இருக்க வேண்டும். கருத்தரங்கத்திற்கு டென்மார்க் அரசு தமிழக அரசை யாரையாவது ஒருவரை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என் பெயரை முன்மொழிந்தார்.

நான் நாளை டென்மார்க்கில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை ரத்து செய்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் டென்மார்க்கிற்க்கு மற்றொரு நாள் போக முடியும். இந்த நிகழ்ச்சி காண வேண்டும் என்று எனக்கு விருப்பம்.

நான் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருந்தால் தமிழ் மொழியை மட்டுமல்ல ஒரு மாபெரும் தமிழ் அறிஞரை புறக்கணிப்பது ஆகிவிடும் என்ற பழிச்சொல்க்கு ஆளாய் இருப்பேன். எனவே கடைசி நேரத்தில் அது நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு காட்பாடி வந்து சேர்ந்தேன். சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். பேராசிரியர் பட்டம் பெற்றவர், தமிழறிந்தவர் தமிழ் ஆழம் அறிந்தவர் தமிழ் நிறம் அறிந்தவர் அதன் நோக்கம் அறிந்தவர் தமிழ் குறித்து எல்லாம் அறிந்தவர் சாலமன் பாப்பையா.

சாலமன் பாப்பையா என்னை பார்த்து தயவுசெய்து நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறிய போது எனக்கு தூக்கிவாரி போட்டது. காரணம் நான் தமிழ் படித்தவன் அல்ல, பிஏ எக்கனாமிக்ஸ் எம் ஏ பாலிடிக்ஸ் மற்றும் வழக்கறிஞர்க்கு படித்தவன், ஆனால் உங்களைப் போன்று கோனார் புத்தகத்தை வைத்து ஒரு தமிழ் பாடத்தை படித்து முடித்தவன். நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் ஒன்று தோன்றியது. இரண்டு சினிமாக்காரர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டேன். சாலமன் பாப்பையா ஒரு நடிகர். ராஜா ஒரு சினிமா நடிகர். எனக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை கிடைத்திருந்தால் நானும் நடிகனாகியிருப்பேன்.

தமிழ் இலக்கியத்தில் சங்க கால இலக்கியம் என்பது மிக முக்கியமானது. உலகத்திலேயே வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு சங்க இலக்கியம் உள்ளது. மேலும் அகநானூறு வரிகளை மேற்கோள்காட்டி தமிழின் பெருமைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய துரைமுருகன், என்னை பொருத்தவரையில் ஒரு மாதத்திற்கு 5000 முதல் பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்குபவன். 30 முதல் 40 புத்தகம் என்னுடைய நூலகத்தில் இருக்கும். அந்த புத்தகங்களை பார்த்தாலே படிக்க வேண்டும் என்று தோன்றும்.

எனவே பள்ளி பிள்ளைகளே நன்றாக படியுங்கள். படிப்பு ஒன்று தான் உங்களை உயர்த்தும். சங்க இலக்கியங்களை ஒன்று தொட்டு அரிய வேண்டும் என்று அவர் அறிவுரை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.