லண்டன்: “நீங்களும் தாத்தாவும் மீண்டும் இணைந்ததை அறிந்து நாங்கள் புன்னகைக்கிறோம்” என்று ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து இளவரசர் ஹாரி உருக்கமாக கூறியுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி எலிசபெத்தின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் உள்ளது. இன்று அவரது உடல் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு கொண்டுவரப்படும். நாளை மறுநாள் லண்டன் கொண்டுவரப்படுகிறது. இங்கு ராணியின் உடல் சில நாட்கள் இருக்கும். வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு எதிரே நடைபெறும்.
இந்த நிலையில், இளவரசர் ஹாரி தனது பாட்டியான ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு முதன்முதலாக பொதுவெளியில் தனது எண்ணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “என் பாட்டியின் வாழ்க்கையைக் கொண்டாடும் இந்த நேரத்தில், கம்பீரமான ராணியாக இருந்த அவர் சேவை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பில் பலருக்கு வழிகாட்டும் திசைகாட்டியாக இருந்தார் என்பதை நினைவுபடுத்துகிறோம்.
எனது பாட்டி உலகம் முழுவதும் போற்றப்பட்டு மதிக்கப்படுவர். அவருடைய அசைக்க முடியாத கருணையும் கண்ணியமும் அவருடைய வாழ்நாள் முழுவதும் இருந்தது. அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் மறைவுக்குப் பிறகு அவர் பேசிய வார்த்தைகளை நாம் எதிரொலிப்போம். இப்போது நம் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கக் கூடியது வார்த்தைகள்தான். வாழ்க்கை என்பது நிச்சயமாக, இறுதிப் பிரிவுகளையும், முதல் சந்திப்புகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவு வருத்தத்தை அளித்தாலும் என்னுடைய குழந்தைப் பருவத்தில் உங்களுடனான நினைவுகளுக்கும், என் அன்பான மனைவி மற்றும் குழந்தைகளுடன் உங்களை சந்தித்த நினைவுகளுக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.
உங்களுடன் பகிர்ந்து கொண்ட நேரங்களை நான் மிகவும் மதிக்கிறேன். நாங்கள் மட்டும் உங்களை நினைக்கவில்லை.. இந்த உலகமே உங்களை நினைக்கிறது. நீங்களும் தாத்தாவும் மீண்டும் இணைந்ததை அறிந்து நாங்கள் புன்னகைக்கிறோம்” என்று ஹாரி கூறியுள்ளார்.
முன்னதாக அரசக் குடும்பத்துடனானவேறுபாடு காரணமாக இளவரசர் ஹாரி, தனது மனைவி மெக்கனுடன் தனக்கு வழங்கப்பட்ட அரசக் குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.