நாளை முதல் மற்றுமொரு ஓடிடி தளத்தில் 'விக்ரம்'
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி தியேட்டர்களில் வெளிவந்த படம் 'விக்ரம்'. தமிழில் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இந்தப் படம் ஜுலை 8ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஓடிடியில் வெளியான பின்னும் தியேட்டர்களில் ஓடி 100 நாட்களைக் கடந்தது. ஓடிடியிலும் இப்படம் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை செப்டம்பர் 13 முதல் ஜீ 5 தமிழ் ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய பதிப்புகள் வெளியாக உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹாட்ஸ்டார் ஓடிடி தளம்தான் 'விக்ரம்' படத்தின் ஓடிடி உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியது. அதில் வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது வேறொரு தளத்திலும் வெளியாக உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பதிப்புகள் ஜீ 5 ஓடிடி தளத்தில் முதலில் வெளியாகின. அதற்குப் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அவர்களுடைய ஓடிடி தளத்தில் அந்தப் படத்தை வெளியிட்டது.
ஓடிடி நிறுவனங்களே பரஸ்பரம் இப்படி மாற்றிக் கொள்கிறார்களா அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு வேறொரு ஓடிடி தளத்திற்கும் விற்கிறார்களா என்பது ரகசியமாக உள்ளது. விரைவில் அந்த ரகசியம் வெளியாகலாம்.