நேற்று பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 65-வது நினைவு தின நிகழ்வு நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டுள்ளது. மதுரையிலிருந்து பரமக்குடி சென்றபோது பல்வேறு இடங்களில் காவல்துறை என்னை தடுத்து நிறுத்தியது. காவல்துறை வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டன. 4 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மற்றோரு அமைப்பினரை அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதித்தது. ஒரே சமூகத்திற்குள் மோதலை உருவாக்க காவல்துறை திட்டமிடுகிறது. நினைவிட பொறுப்பை மாற்ற வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்கு தொடர்பில்லாதவர்கள் பொறுப்பில் உள்ளார்கள். புதிய தமிழகம் கட்சியிடம் நினைவிட பொறுப்பை வழங்க வேண்டும்.
இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த யாரும் வரக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது” என்றவர்,
தொடர்ந்து பேசும்போது, “தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஒரு வாக்குறுதியையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை, அனைத்து தேர்தல் வாக்குறுதிகளுக்கும் நேர்மாறாக தி.மு.க-வின் நடவடிக்கைகள் உள்ளன.
மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளமுடியாது. கட்டண உயர்வால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். தமிழக அரசு மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே மின்கட்டணத்தை உயர்த்த தேவையில்லை. செப்டம்பர் 20-ல் மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வில் மாணவர்களின் தோல்விக்கு தி.மு.க-வே பொறுப்பு, தி.மு.க-வின் தவறான பிரசாரத்தால் நீட் தேர்வை மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இன்று நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவதில்லை, அரசியலுக்காக நீட் விவகாரத்தில் தி.மு.க தவறாக செயல்பட்டு வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என தி.மு.க பொய்ப்பிரசாரம் செய்கிறது. முதல்வர் சர்வாதிகார போக்குடன் பேசி வருகிறார், மக்களின் குரல்களை முதல்வர் செவி சாய்த்து கேட்பதில்லை” என்றார்.