நிலக்கோட்டை : நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை 75-ஆண்டு பழமையான தாலுகா தலைநகராகவும் 23-ஊராட்சி 2-பேரூராட்சிகளின் முக்கிய தலைநகராகவும் வளர்ந்து வரும் நகரங்களில் முக்கிய நகராகவும் உள்ளது. இந்நகரில்150-க்கும் மேற்பட்ட கடைகளுடன் பிரசித்திபெற்ற பூ வணிக வளாகம், காய்கறிகள், பழங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் இறச்சிக்கடைகள் என 400-க்கும் மேற்பட்ட தினசரி கடை வணிகவளாகம் உள்ளது.
மேலும் 400-ஆண்டு பழமையான நடராஜர் கோவில், 800 ஆண்டு பழமையான பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் தங்க ஆபரணங்களுக்கு பெயர் பெற்ற நகைக்கடை பஜார், செப்பு, பித்தளை பாத்திர தயாரிப்பு என வளர்ந்து வரும் வியாபாரம் மற்றும் தொழில் நகரங்களில் முக்கிய நகராகவும் நிலக்கோட்டை உள்ளது. சமீபகாலமாக இந்த பகுதியில் விளையும் பூக்களை இங்கிருந்தே ஏற்றுமதி செய்ய திரும்பிய பக்கமெல்லாம் புதிய புதிய ஏற்றுமதி நிறுவனங்களும் உருவாகி வருகின்றன.
மேலும் திண்டுக்கல், செம்பட்டி,நிலக்கோட்டை, அணைப்பட்டி,சோழவந்தான் வழியாக செல்லும் மதுரை சாலை மற்றும் மதுரை, வாடிப்பட்டி, சிலுக்குவார்பட்டி, பள்ளப்பட்டி, வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி மற்றும் கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலைகளான நான்கு ரோடுகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பாகவும் இருந்து வருகிறது. இப்பகுதியில் பெருகி வரும் வாகனங்களால் அடிக்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. இதே போல செம்பட்டி-நிலக்கோட்டை-சோழவந்தான் சாலையிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே நிலக்கோட்டை நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. இதனை குறைக்க இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செம்பட்டி சாலை குறிஞ்சிநகர் அரசு மருத்துவமனை முதல் அணைப்பட்டி சாலை வரை, மதுரைச்சாலை கரியாம்பட்டி பிரிவு மார்நாடு கருப்புசாமி கோயில் வழியாக மணியக்காரன்பட்டி வரை என புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்தும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சொளந்தர்ராஜன் கூறுகையில், ‘‘ திண்டுக்கல் மாவட்டத்தில் பிற நகரங்களைப் போல நிலக்கோட்டையும் வளர்ந்து வரும் நகரங்களில் மிக முக்கிய நகராக உள்ளதால் சாலை போக்குவரத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி மேம்பாட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ள தமிழக அரசு நிலக்கோட்டை நகரில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச் சாலையை அமைக்க உரிய ஆவனம் செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.