வரும் அக்டோபர் 24 -ம் தேதி தீபாவளி கொண்டாடப்படவிருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள், சரவெடிகளை விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை நீடித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி அரசாங்கம் காற்று மாசுபாட்டைக் கருத்தில்கொண்டு இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஜனவரி 1-ம் தேதி வரை தடை விதித்திருக்கிறது. இதனால், டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அதிகளவு பட்டாசு ஏற்றுமதி செய்துவந்த சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருக்கின்றனர்.
டெல்லி அரசாங்கம் தடை விதிக்க காரணம்:
உலகிலேயே மிக அதிகமான காற்று மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலில், டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டேட் ஆஃப் க்ளோபல் ஏர் (State of Global Air) அமைப்பு வெளியிட்ட பட்டியலில், இந்தியாவின் தலைநகரமான டெல்லி 110 PM அளவை கொண்டு முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிறுவனமான மாசு தொழில்நுட்ப நிறுவனம் (IQAir) வெளியிட்ட்ட தரவுகளிலும், உலகளவில் காற்று மாசுபட்டத் தலைநகரமாக டெல்லி முதலிடத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பதைத் தொடர்ந்து, டெல்லி அரசாங்கம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முழுத்தடை விதித்தது. தடை இருந்தபோதிலும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வுப்படி தீபாவளிக்குப் பிறகான வாரத்தில் டெல்லி காற்றி தரம் மோசடைமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், தடையை மீறி பட்டாசு விற்பனை செய்தவர்கள், வெடித்தவர்கள் 281 பேரை டெல்லி காவல்துறை கைதுசெய்தது. சுமார் 20 ஆயிரம் கிலோ பட்டாசுகளைப் பறிமுதல் செய்தது.
மீண்டும் தடை:
இந்த நிலையில், இந்த ஆண்டும் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதாவது, “தீபாவளியை முன்னிட்டு அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என அனைத்துக்கும் டெல்லி அரசு தடை விதிக்கிறது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும். இதனை அமல்படுத்த டெல்லி காவல்துறை, டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, வருவாய்த் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
விருதுநகர் ஆட்சியரின் எச்சரிக்கை:
இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, “பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்போர்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அறிவிப்பு வெளிட்டிருப்பது பட்டாசு ஆலை முதலாளிகளை பீதியடையச் செய்திருக்கிறது.
மேலும், “உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தடைசெய்யப்பட்ட ரசாயன மூலப்பொருள்களைக் கொண்டு பட்டாசு தயாரிக்கப்படுகிறதா, சட்ட விரோதமாக வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிக்கப்படுகிறதா, தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா, தொழிலாளர்கள் இரவு நேரங்களில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்பது குறித்து ஆய்வு நடந்த வட்டாட்சியர், தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு நிலைய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள், தீபாவளி வரை தினமும் பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாகச் சென்று, விதிமீறல் நடைபெறாவண்ணம் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
பறிதவிப்பில் பட்டாசுத் தொழிலாளர்கள்:
தொடர்ச்சியான தடை உத்தரவு, கெடுபிடி கண்காணிப்புகளால் பட்டாசு ஆலை முதலாளிகள், தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் என சிவகாசி பட்டாசுத் தொழிலை நம்பியிருக்கும் அனைத்து தரப்பினரும் கவலை அடைந்திருக்கின்றனர். இதுகுறித்துப் பேசிய பட்டாசு விற்பனையாளர் புனிதன், “டெல்லியில் காற்று மாசுபாட்டுக்குக் காரணம் தொழிற்சாலை புகைகள், வாகனப் புகைகள், விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது போன்றவைதான் முக்கியக் காரணம். தீபாவளியன்று அதிகபட்சம் ஒரு 3 மணிநேரம், அதற்கு மறுநாள் சில மணிநேரம்தான் பட்டாசுகளை மக்கள் வெடிக்கிறார்கள். அதனால்தான் டெல்லியின் காற்று மாசடைகிறது என்றுக்கூறி, பட்டாசு வெடிக்க தடை விதிப்பது மிகவும் தவறானது. மேலும், டெல்லியின் இந்த தடை உத்தரவால், எங்களைப் போன்ற தமிழ்நாடு மாநில சிறிய விற்பனையாளர்களுக்கு பெரிதாக பாதிப்பில்லை. ஆனால், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்களும், அதை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்!” என்றார்.
அதேபோல, பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில், “ஏற்கெனவே பேரியம் மூலப்பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள், சரவெடிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பட்டாசுத் தொழிலில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். உற்பத்தி செய்யும் பட்டாசுகளை தமிழ்நாட்டை விட, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்வதுதான் அதிகம். இப்படி டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களில், அதுவும் தீபாவளி பண்டிகை நாட்களில் பட்டாசு விற்க, வெடிக்கத் தடை விதிக்கப்படுமானால், சிவகாசி பட்டாசுத் தொழில் முற்றிலும் முடங்கும். இந்தத் தொழிலை நம்பியிருக்கும் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, பட்டாசுகள் மீதான தடையை நீக்கவும், பட்டாசுத் தொழிலை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.