பாகிஸ்தானில் வெள்ளம், சீனாவில் வறட்சி : காலநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்வோமா?

இந்தியாவின் Silicon Valley என அழைக்கப்படும் பெங்களூரு நகரம், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஒரு வாரத்திற்கு முற்றிலும் ஸ்தம்பித்தது. மிதக்கும் கார்கள், நீரில் மூழ்கிய சாலைகள், தனித்தீவுகளாய் மாறிய கட்டடங்கள் என பெங்களூருவின் திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் தான். ஏறக்குறைய 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது சென்னை சந்தித்த அதே நிலையை தற்போது சந்தித்துள்ளது. இந்த வெள்ளத்தினால் பெங்களூருவில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மனிதத் தவறுகளும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத மழையை பெங்களூரு சந்தித்துள்ளது.  

இதே போல, அண்டை நாடான பாகிஸ்தானும் வரலாறு காணாத மழையை சந்தித்துள்ளது. குறிப்பாக சிந்து மாகாணத்தில் வழக்கத்தை விட 784 சதவீதமும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வழக்கத்தைவிட 500 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக இந்திய மதிப்பில் 14 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு அண்டை நாடான பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி இருக்க மற்றொரு அண்டை நாடான சீனா, வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப அலையால் சீனா பாதிக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீளமான நதியான யாங்சே நதி முற்றிலும் வறண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐரோப்பிய நாடுகளும் வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகின்றன. லண்டனில் முன்னெப்பொதும் இல்லாத வகையில் தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சோமாலியா, நைஜீரியா என ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே நாம் கேட்டு, பார்த்து பழகிய பஞ்சம், வறட்சி போன்ற விஷயங்களை தற்போது ஏகாதிபத்திய நாடுகளும் சந்திக்கத் தொடங்கியுள்ளன. 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள த்வைட்ஸ் பனிப்பாறை வெப்பமயமாதல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் உருகத் தொடங்கியுள்ளது. இந்த பனிப்பாறை உருகினால், ஆண்டுக்கு 50 பில்லியன் டன்பனிப்பாறைகள் உருகும் எனவும், இதனால் கடல் மட்டம் 2 அடி வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். 

 ஒரு பக்கம் வறட்சி, மறுபுறம் வெள்ளம்…இவை அனைத்தும் காலநிலை மாற்றம் என்ற ஒரே புள்ளியில் தான் நம்மை நிறுத்துகின்றன. மேக வெடிப்பு, வெப்ப அலை என புதிய வார்த்தைகளையும் காலநிலை மாற்றம் நமக்கு அறிமுகம் செய்துள்ளது. பனிப்பாறைகள் உருகுவதில் இருந்து பவளப்பாறைகளின் அழிவு வரை நாம் கற்பனை செய்வதை விட மிக வேகமாக காலநிலை மாற்றத்தின் விளைவுகள் அரங்கேறி வருகின்றன.   

IPCC எனப்படும் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழு, காலநிலை மாற்றம் அபாயக் கட்டத்தை எட்டியததை அறிவதற்கான எல்லைப் புள்ளிகளை வரையறுத்துள்ளது. ஒரு வேளை இந்த எல்லைகள் மீறப்பட்டால் பூமியின் அமைப்புகள் செயல்படும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்தக்கூடும் எனவும், அதன் பின் வெப்பமயமாதல் இல்லாவிடினும் இந்த மாற்றத்தைத் தடுக்க முடியாது. உதாரணமாக, மலை உச்சியில் இருந்து உருண்டு விழும் பாறையை எவ்வாறு இடையில் தடுக்க முடியாதோ, காலநிலை மாற்றமும் அவ்வாறு தான். 

காலநிலை உச்சி மாநாடுகளில் உலக நாடுகள் பல முடிவுகளை எடுத்தாலும், அவை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளதா எனக் கேட்டால் கேள்விக்குறியே.  காலநிலை மாற்றத்தைத் தடுக்க நிதி ஒதுக்கவோ, பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஏற்கவோ இன்னும் உலக நாடுகள் தயாராக இல்லை. காலநிலை மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது அறிவியலுக்கு எதிரானவர்கள் எனவும், வளர்ச்சியை ஏற்காதவர்கள் எனவும் முத்திரை குத்தப்படுவதுண்டு. ஆனால் எதார்த்தம் அதுவல்ல.
 
அறிவியலின் பெயரால் ஏற்படும் வளர்ச்சி, அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருப்பதில்லை. சூரிய ஒளி பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்கும். ஆனால், மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்றும் உண்டு. அறிவியலில் பெயரால் பெரும் லாபத்தை அடைந்து  வரும் பெரு நிறுவனங்கள், காலநிலை மாற்றத்தின் பெயரால் அவற்றை இழக்க விரும்பவில்லை. அதன் விளைவு…பேரிடர்கள்.

இதில் முரண் என்றால், காலநிலை மாற்றத்திற்குக் காரணமான உயர் மட்டத்தினர், அவற்றின் விளைவுகளை எதிர்கொள்ள இயலும். உதாரணம், பெங்களூரு வெள்ளத்தின்போது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தபோது, புறநகர் பகுதியில் உள்ள விடுதிகளில் ஓர் இரவு தங்குவதற்கு ஒரு குடும்பத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணத்தை செலுத்தியவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த பாரபட்சத்தை எதிர்த்து எழுப்பப்படும் குரல்களே அறிவியலுக்கு எதிரான குரல்களாக பார்க்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாவது விளிம்பு நிலை மக்கள் தான்.  ஐபிசிசி-யின் அறிக்கைப்படி உலகம் முழுவதும் 330 கோடி முதல் 360 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் வாழ்கின்றனர். உலகத் தலைவர்கள் இன்னும் காலநிலை மாற்றத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே காலநிலை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.  வெற்று வார்த்தைகளால் என்னுடைய குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் நீங்கள் திருடிவிட்டீர்கள் – எதிர்காலச் சந்ததியினருக்காக பூமியை விட்டு வையுங்கள் என நியூயார்க்கில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டில் ஸ்வீடனைச் சேர்ந்த இளம் பருவநிலை செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பெர்க் ஆற்றிய உரையை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.

கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளில் இருந்து பாடம் கற்று அதனை சரி செய்து கொள்வதே மனிதனை பிற உயிர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. இதுவரை நிகழ்ந்த, நிகழும்  பேரிடர்கள் மூலம், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை நாம் உணரவில்லை எனில், பேரிடர்களும், பெருந்தொற்றும் நமது இயல்பு வாழ்க்கையின் அங்கமாய் மாறிவிடும் என்பது கசப்பான உண்மை.  

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.