திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வார்கள். இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்த நான்கு இளைஞர்கள், அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர்களிடம் ஆயுதங்களைக் காட்டி பணம், செல்போன் உள்ளிட்ட பொருள்களைக் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கொடுக்கமுடியாது என்று பதிலளித்துள்ளார்கள்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த கொள்ளை கும்பல், இளைஞர்கள் மூன்று பேரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த செல்போன், பணம் உள்ளிட்ட பொருள்களை எடுத்திருக்கிறார்கள். வழிப்பறி கும்பல் அரிவாளுடன் சுற்றுவதைப் பார்த்த பயணிகள், பயந்து ஓட தொடங்கினர். இந்த செய்தி பேருந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் பரவவே, பரபரப்பு ஏற்பட்டு பேருந்து நிலையத்தில் கூட்டம் கூடியது.
பொதுமக்கள் கூடுவதைப் பார்த்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தது. வந்த நான்கு பேரில் அதீத போதையிலிருந்து ஒருவர் மட்டும் மாட்டிக்கொள்ள, மற்ற மூவரும் தப்பித்துச் சென்றுவிட்டார்கள். சிக்கிய ஒரு கொள்ளையனை நையப்புடைத்து பொதுமக்கள் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸில் சிக்கிய பொன்னேரி என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த வாலிபர் கொடுத்த தகவலின்படி, மற்றொரு வாலிபரும் கைதுசெய்யப்பட்டார்.
போலீஸில் சிக்கியவர்களிடமிருந்து வழிபறி செய்யப்பட்ட செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பேருந்து நிலையத்தில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டும், சிக்கியவர்கள் கொடுத்த தகவலின் படியும் தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.