சென்னை: பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, சிறுமியின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் நாசர், சிறுமி டான்யா குடும்பத்திற்கு அரச இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்ததுடன், சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவானது எனவும் அதை முழுமையாக அரசே ஏற்கும் எனவும் , சிறுமியின் படிப்பு செலவையும் அரசு ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுமி டானியாவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 17-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், மருத்துவக் குழுவினா் டானியாவின் வீட்டுக்குச் சென்று இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனா். பின்னா், சிறுமியை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு டானியாவுக்கு 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா்.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் நாசரும் கலந்துகொண்டார். சிறுமியை தூக்கி வைத்த கொஞ்சினார். அப்போது பேசிய அமைச்சா் சா.மு.நாசா், சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும். சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவானது. அதை முழுவதுமாக அரசே ஏற்கும் என குறிப்பிட்டார்.