மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த சூடான் நாட்டுப் பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 5.4 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக 6 சூடான் பிரஜைகளை அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட சூடான் பிரஜைகளை அதிகாரிகள் சுற்றிவளைத்த போது, திடீரென அவர்கள் கூச்சலிட்டு தப்பி ஓட முயன்றனர். எங்களின் கவனத்தைத் திசைதிருப்ப தனித்தனியாக பிரிந்து வெளியேற முயன்றனர்.
எனினும், அவர்களை சுற்றிவளைத்து பிடித்தோம். அவர்களில் ஒருவன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்டில் தலா ஒரு கிலோ எடையுள்ள 12 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தான். அதையடுத்து அவனுடன் தொடர்புடைய 5 பேரையும் கைது செய்தோம். அவர்கள் விசாரணைக்கு பின்னர் சூடானுக்கு நாடு கடத்தப்படுவர். மேலும், அவர்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. 6 சூடான் பிரஜைகளும் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’ என்றனர்.