டெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் பரிசுப் பொருட்களை ஆதாயம் அடைந்ததாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கு பதிந்து விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை.
ெதாடர்ந்து இதேவழக்கில் சிக்கிய மற்றொரு நடிகை நோரா ஃபதேஹி, கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி உட்பட ஐந்து பேருக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால், ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று (செப். 12) வழக்கில் ஆஜராக முடியாது என்றும், மற்றொரு நாளில் ஆஜராக உள்ளதாக கூறி டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறப்பு பொருளாதா குற்றப்பிரிவு அதிகாரி ரவீந்திர சிங் யாதவ் கூறுகையில், ‘ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி உட்பட ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஜாக்குலின் மின்னஞ்சல் மூலம் மற்றொரு நாளில் ஆஜராக உள்ளதாக கூறியுள்ளார். அவர் தனக்கு சினிமா படப்பிடிப்பு ஷூட்டிங் இருப்பதால், வேறொரு நாளில் அதிகாரிகள் முன் ஆஜராக அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் மற்றொரு நாளில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்படும்’ என்றார்.