வேட்பாளர் கொடுத்த மதுவை வாங்கி குடித்த 6 வாக்காளர்கள் பலி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு மதுபானங்களை சப்ளை செய்து வாக்குகளை சேகரிக்க அழைத்து செல்கின்றனர். அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரிடம் மதுபானங்களை வாங்கிக் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஹரித்வார் மாவட்டம் பூல்கர் கிராமத்தின் பஞ்சாயத்து வேட்பாளர்  ஒருவர், சிலருக்கு மதுபானங்களை சப்ளை செய்துள்ளார்.

அந்த மதுபானத்தை குடித்தவர்களில் சிலரின் உடல்நிலை மோசமடைந்தது. அடுத்தடுத்த மூன்று நாட்களில் ஆறு பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வேட்பாளரின் சகோதரர் நரேஷ் மற்றும் சிலரை கைது செய்துள்ளோம். 6 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், கிராம மக்கள் 8 பேர் இறந்ததாக கூறுகின்றனர். இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்விவகாரத்தில் 4 போலீசார் மற்றும் 9 கலால் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விசாரணையில் இறந்த 6 பேரும் எந்த வகையான மதுவை குடித்தனர் என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.