நடிகர் விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, விஜய்யை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இதற்கிடையே வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் வம்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என கண்டிஷன் போட்டார். இருந்தாலும், வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில்’வாரிசு’ படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட் என்று கமெண்ட் செய்துவருகின்றனர். திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீஸாவதற்கு முன்னரே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாகவும், சாட்டிலைட் உரிமம் 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் ரைட்ஸ் 60 கோடி ரூபாய்க்கும், பாடல்கள் 10 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பேசப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளாகவே இவ்வளவு வியாபாரம் ஆகியிருப்பதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.