காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது.
ஆனால் இதற்கு போட்டியாக காங்கிரஸ் மட்டும் இருந்து வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால் பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகவின் வெற்றி வியூகத்தை குலைக்கும் வகையில் உருவாகும் எந்த ஒரு கிளர்ச்சி நடவடிக்கையையும் பாஜக எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதேபோல, இதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வாக்குறுதிகள்
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாடலை வைத்துதான் பாஜக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. இந்த பிரசாரம் நினைத்த மாதிரியே வெற்றியையும் கொடுத்தது. எனவே குஜராத்தை பாஜக அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஆனால் பாஜகவுக்கு போட்டியாக ஆம் ஆத்மி தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாம், வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை ஆகிய அறிவிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
பட்டியல்
இது தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. இந்நிலையில் பாஜக தனது எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்களிடம் வேட்பாளர்கள் பட்டியலை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இதில் உள்ள மிகப்பெரிய சிக்கலையும் கட்சி தற்போது களைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதவது தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளவர்கள் ஒருபுறமும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பட்டியல் மற்றொருபுறமும் பாஜக கேட்டு பெற்றிருக்கிறது.
மற்றொரு பட்டியல்
இது குறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில் “ஒவ்வொரு தேர்தல்களிலும், போட்டியிடுபவர்கள் மற்றும் அந்த வாய்ப்புக்கு நெருக்கமானவர்கள் என இரு தரப்பினர் இருக்கின்றனர். இதில் போட்டியிடுபவர்கள் எந்த பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பிரச்னை செய்கின்றனர். இவர்களுக்காகதான் காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியினரும் காத்திருக்கின்றனர். இவர்களை அக்கட்சியினர் தங்கள் வசம் ஈர்க்க முயற்சிக்கின்றனர். எனவே இதனை தடுக்க பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
புது வியூகம்
இது வேட்பாளர் தகுதிக்கு நெருக்கமாக இருப்பவர்களின் பட்டியல். இந்த பட்டியலை கட்சித் தலைமை கேட்டுள்ளது. இதன் காரணமாக இவர்கள் வேறு கட்சிகளுக்கு செல்வதை எளிதில் தடுக்க முடியும் என்று கட்சி நம்புகிறது” என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பாஜக தனது வெற்றி வாய்ப்புகளை மேலும் உறுதி செய்திட முயற்சித்து வருகிறது. கடந்த 1995 முதல் குஜராத்தில் ஆட்சியிலிருக்கும் பாஜக இந்த முறை வெற்றிபெறுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரிய வரும்.