பிரிட்டிஷ் ராஜ வம்சம், உலகின் பணக்கார ராஜ குடும்பங்களில் ஒன்று. லண்டனில் இருக்கும் பிரமாண்டமான பக்கிங்காம் அரண்மனை உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அரண்மனைகள் மற்றும் கோட்டைகள், பல்லாயிரம் ஏக்கர் எஸ்டேட் என சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் கொண்ட குடும்பம். பிரிட்டனுக்கு மட்டுமின்றி கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று 14 நாடுகளுக்கும் சேர்த்த ராஜ வம்சமாக இருக்கும் இந்தக் குடும்பத்தின் அரண்மனைகள் மற்றும் கோட்டைகளைப் பார்க்கலாமா?
பக்கிங்காம் அரண்மனை:
பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் நிர்வாகத் தலைமையகம் இதுதான். லண்டன் மாநகரின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ளது இந்த பிரமாண்ட அரண்மனை. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அரண்மனையில் அவ்வப்போது புதுப்புது கட்டிடங்கள் உருவாகின. புகழ்பெற்ற விக்டோரியா மகாராணிதான் இங்கு குடியேறி முதலில் ஆட்சி செய்தவர்.
பிரிட்டனின் அடையாளமாக இந்த அரண்மனையே இருக்கிறது. வெளிநாட்டு மன்னர்கள், அதிபர்கள், பிரதமர்கள் வந்தால் அவர்களுக்கு விருந்தும் வரவேற்பும் கொடுப்பது இங்குதான். ராஜ குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள் இங்குதான் நடக்கும். புதிய மன்னரோ, ராணியோ முடிசூட்டிக் கொண்டதும், இங்கிருக்கும் பால்கனியிலிருந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.
இரண்டாம் உலகப் போரின்போது ஒன்பது முறை ஜெர்மனி விமானங்கள் இந்த அரண்மனை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின. ஜார்ஜ் மன்னர் இங்கே இருந்தபோதே ஒருமுறை குண்டு வீசி, அரண்மனை வளாகத்தில் இருந்த தேவாலயம் அழிக்கப்பட்டது.
775 அறைகள் கொண்ட பக்கிங்காம் அரண்மனையில் 92 அலுவலக அறைகளும் 52 ஆடம்பரப் படுக்கை அறைகளும் உள்ளன. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்கள் தங்குவதற்காக பிரமாண்ட அறைகள் இங்கு உள்ளன.
ரஷ்யாவின் ஜார் மன்னர், பிரான்ஸை ஆண்ட நெப்போலியன் முதல் பல அமெரிக்க அதிபர்கள் வரை இங்கு தங்கியுள்ளனர்.அரண்மனைக்கு தனியாக ஒரு போஸ்ட் ஆபீஸ், சினிமா தியேட்டர், மருத்துவமனை என்று சகல வசதிகளும் உள்ளன. பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் உள்ள தோட்டம்தான், லண்டனில் இருக்கும் மிகப்பெரிய தோட்டம். 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் மிகப்பெரிய விருந்துகளை இந்தத் தோட்டத்தில் நடத்துவார்கள்.
விண்ட்ஸர் கோட்டை:
11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இது. இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் உள்ள இதுதான், ஐரோப்பாவில் நீண்ட காலமாக ராஜ வம்சத்தினர் வாழும் கோட்டை என்ற பெருமையைப் பெற்றது. பல போர்களையும் முற்றுகைகளையும் பார்த்தது. தேம்ஸ் நதிக்கரையில் 5 ஆயிரம் ஏக்கர் பூங்காவுக்கு மத்தியில் இந்தக் கோட்டை இருக்கிறது. சுமார் 13 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோட்டை ஒரு சிறிய நகரம் போலவே காட்சி தருகிறது. அரச குடும்பத்தினர் வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்க இங்கு வருவார்கள். கோட்டையைச் சுற்றியிருக்கும் அடர்ந்த காடுகளில் பிரமாண்ட மரங்கள் நெடிதுயர்ந்து நிற்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீவிபத்தில் சிதைந்த இந்தக் கோட்டை பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
ஹோலிரூட் அரண்மனை:
ஸ்காட்லாந்து பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தின் அரண்மனை இது. 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில்தான், ஸ்காட்லாந்து போகும்போது மன்னரும் மகாராணியும் தங்குவார்கள். பெரும்பாலும் கோடைக்காலத்தில் அரச குடும்பத்தினர் இங்கு வருவார்கள். 10 ஏக்கர் தோட்டத்துக்கு மத்தியில் எட்டாயிரம் சதுர மீட்டரில் விரிந்திருக்கிறது அரண்மனை. 289 அறைகள் இந்த அரண்மனையில் உள்ளன. சிங்கம் உள்ளிட்ட காட்டு விலங்குகளை அடைத்து வைத்து இங்குதான் மன்னர் குடும்பத்தினர் வளர்த்தனர்.
12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் மன்னர் குடும்பத்து பழைமையான ஓவியங்கள் பலவும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மன்னர் குடும்பத்தினர் விருந்து சாப்பிடுவதற்காக பிரமாண்ட டைனிங் ஹால் இங்கு உள்ளது. சுமார் 3 ஆயிரம் வெள்ளிப் பாத்திரங்கள் கொண்ட அழகிய டைனிங் ஹால் இது.
ஹில்ஸ்பரோ கோட்டை:
பிரிட்டிஷ் ராஜவம்சத்துக்கு என்று வடக்கு அயர்லாந்து பகுதியில் இருக்கும் அதிகாரப்பூர்வ கோட்டை. 100 ஏக்கர் தோட்டத்துக்கு மத்தியில் இருக்கும் இந்தக் கோட்டையில்தான் அயர்லாந்து வரும்போது மன்னர் குடும்பத்தினர் தங்குவார்கள்.
சாண்ட்ரிங்காம் ஹவுஸ்:
இங்கிலாந்தின் நார்ஃபோல்க் பகுதியில் இருக்கும் இதனை ‘வீடு’ என்று அடக்கமாகச் சொல்வதற்குக் கூச்சமாக இருக்கிறது. சுமார் 20 ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்டுக்கு நடுவில் இருக்கும் பங்களா இது. சுற்றிலும் காடுகளும் மலைகளும் பூங்காக்களும் ஏரிகளுமாக இயற்கை அழகுடன் இருக்கும் இந்த மாளிகைக்கு தங்கள் அந்திமக் காலத்தில் வந்து தங்கி மரணத்தை எதிர்கொள்ள பிரிட்டிஷ் மன்னர்கள் விரும்பினார்கள். அப்படிப் பலர் இங்கு இறந்திருக்கிறார்கள்.
டென்மார்க் இளவரசி அலெக்ஸாண்டிராவை திருமணம் செய்துகொண்டார் ஏழாம் எட்வர்டு மன்னர். தன் புது ராணிக்காக இந்த மாளிகையையும் தோட்டத்தையும் அவர் வாங்கினார். அப்படித்தான் இது அரச குடும்ப சொத்தாக மாறியது.
சாண்ட்ரிங்காம் ஹவுஸ் தோட்டத்தில் ஏழு கிராமங்கள் இருக்கின்றன. ஏராளமான வன விலங்குகள் வசிக்கும் காடு என்பதால், மன்னர் குடும்பத்தினர் வேட்டையாட இங்கு வருவார்கள். பெரும்பாலும் அவர்கள் ஓய்வெடுக்க வரும் இடம் என்பதால், அதற்கு ஏற்ற விதத்தில் இது அமைந்துள்ளது. விளையாட்டு மைதானங்கள், துப்பாக்கி அறைகள், மியூசியம் என்று பல கண்கவர் அம்சங்கள் இங்கு உள்ளன.
பால்மோரல் கோட்டை:
ஸ்காட்லாந்து பகுதியில் இருக்கும் இந்தக் கோட்டையில்தான் இரண்டாம் எலிசபெத் மகாராணி இப்போது இறந்தார். விக்டோரியா மகாராணி காலத்தில் வாங்கப்பட்ட கோட்டை இது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தோட்டங்கள், காடுகள், மலைகள், உயர்ந்த சிகரங்கள், நதிக்கரை, புல்வெளிகள் என்று அனைத்தும் அடங்கிய கோட்டை இது. குதிரைகள் உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் இங்கு வளர்கின்றன.
இந்தக் கோட்டை வளாகத்தில் 150 கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் முழுவதும் கல்லால் உருவான க்ரைகோவன் லாட்ஜ் அழகாக இருக்கும். ஏழு படுக்கை அறைகள் கொண்ட இங்குதான் சார்லஸும் டயானாவும் திருமணமான புதிதில் அடிக்கடி வந்து தங்குவார்கள்.
கிளாரன்ஸ் ஹவுஸ்:
லண்டன் நகரின் மத்தியில் அரச குடும்பத்துக்குச் சொந்தமாக இருக்கும் நான்கு மாடிக் கட்டிடம் இது. 200 ஆண்டுகள் பழைமையானது. அடுத்த வாரிசாக கிரீடம் சுமக்க இருக்கும் இளவரசர் அல்லது இளவரசிக்கு இதுதான் அரண்மனையாக இருக்கும். சார்லஸ் தன் மனைவி கமீலாவுடன் இங்குதான் வசித்தார். இப்போதுதான் அவர் முடிசூட்டிக்கொண்டு பக்கிங்காம் அரண்மனையில் குடியேறுகிறார்.
கென்சிங்டன் அரண்மனை:
லண்டன் மாநகரின் கென்சிங்டன் தோட்டத்தில் இருக்கும் இந்த அரண்மனை 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மன்னர் குடும்பத்தினர் பலருக்கு இது வசிப்பிடமாக இருக்கிறது. மன்னரையும் மகாராணியையும் விருந்தினர்கள் சந்தித்துப் பேச பெரிய தர்பார் மண்டபங்கள் தனித்தனியே இங்கு உண்டு.
இங்கு மன்னர் தன் அறைக்குச் செல்வதற்காக இருக்கும் படிக்கட்டு புகழ்பெற்றது. சுற்றிலும் அழகிய ஓவியங்கள் சூழ்ந்த அகன்ற படிவரிசை அது. ஜார்ஜ் மன்னர் காலத்திலிருந்து ஆட்சி செய்த பிரிட்டிஷ் மன்னர்கள் பலரின் ஆளுயர ஓவியங்கள் கொண்ட தொகுப்பு அது.
ராயல் லாட்ஜ்:
இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் உள்ள 350 ஆண்டுகள் பழைமையான மாளிகை. 98 ஏக்கர் தோட்டத்துக்கு மத்தியில் ஐந்து மாளிகைகள் கொண்டதாக இது இருக்கிறது. பிரதான மாளிகையில் 30 பிரமாண்ட அறைகள் உள்ளன.
செயின் ஜேம்ஸ் பேலஸ்:
பிரிட்டிஷ் ராஜவம்சத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கும் அரண்மனை இது. லண்டன் நகரின் மையத்தில் இருக்கும் இது, சுமார் 500 ஆண்டுகள் பழைமையானது. பிரிட்டிஷ் அரசின் முக்கியமான சில அலுவலகங்கள் இந்த அரண்மனையில் உள்ளன. பிரிட்டனில் பணியாற்ற நியமிக்கப்படும் வெளிநாட்டுத் தூதர்கள் இங்குதான் தங்களுக்கான அனுமதியைப் பெறுவார்கள். இந்திய சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தி சென்று பங்கேற்ற புகழ்மிக்க வட்டமேசை மாநாடு இங்குதான் நடைபெற்றது.
பேர்ன்வெல் மேனர்:
இங்கிலாந்தின் நார்தாம்டன்ஷயர் பகுதியில் உள்ள கோட்டை இது. சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இப்போது சிதைந்திருக்க, அதன் பக்கத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு அரண்மனை கட்டப்பட்டுள்ளது. 40 அறைகள் கொண்ட இந்த அரண்மனை, ராஜவம்சத்தினரின் விருந்தினர் மாளிகையாக இருக்கிறது. 2,500 ஏக்கர் தோட்டத்துக்கு மத்தியில் இந்த மாளிகை இருக்கிறது.
பக்ஷாட் பார்க்:
இந்திய மன்னர்களின் அரண்மனைகளைப் பார்த்து வியந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர், அதேபோன்ற ஸ்டைலில் கட்டிய அரண்மனை இது. இந்தியாவிலிருந்து கலைஞர்களும் பணியாளர்களும் சென்று இதைக் கட்டிக் கொடுத்தார்கள். விக்டோரியா மகாராணியின் மகனுக்குத் திருமணப் பரிசாக இதை இந்திய மன்னர்கள் இணைந்து கட்டிக் கொடுத்தார்கள். 120 அறைகள் கொண்ட இந்த அரண்மனை 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 51 ஏக்கர் தோட்டத்துக்கு மத்தியில் கம்பீரமாக நிற்கிறது இந்த அழகிய மாளிகை.
பிர்கால்:
ஸ்காட்லாந்து பகுதியில் மியூக் நதிக்கரையில் இருக்கும் பிரமாண்ட மாளிகையுடன் கூடிய எஸ்டேட் இது. 53 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் தோட்டங்களும் கொண்ட மாபெரும் வளாகம் இது.
இவை தவிர இன்னும் 10 அரண்மனைகளும் வீடுகளும் அரச குடும்பத்துக்குச் சொந்தமாக இருக்கின்றன.
இந்தக் கோட்டைகள் மற்றும் அரண்மனைகளைப் பழங்கால ஓவியங்கள், கலைப்பொருட்கள் பலவும் அலங்கரிக்கின்றன. சுவர்களைப் போலவே விதானங்களிலும் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தரைகளும் சுவர்களும் நுணுக்கமான மர வேலைப்பாடுகள் கொண்டவை. சாதாரணமாக உட்காரும் நாற்காலி கூட அவ்வளவு கலைநயத்துடன் செய்யப்பட்டிருக்கும். ராஜ குடும்பத்தின் அரண்மனைகளை பிரிட்டிஷ் அரசு பராமரிக்கிறது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் சொத்துகளுக்கு பல சிறப்புகள் உண்டு. சாதாரண மனிதர்கள் போல இவர்கள் சொத்து வரி உள்ளிட்ட வரிகள் எதுவும் கட்ட வேண்டியதில்லை. அரண்மனை மற்றும் கோட்டைகளுக்குள் பிரிட்டிஷ் சட்டங்கள் எதுவும் செல்லுபடி ஆகாது. கோர்ட் உத்தரவுகள் இந்த வாசலைத் தாண்டி உள்ளே வர முடியாது. இங்கு யாரையும் போலீஸார் கைது செய்யவும் முடியாது.