புனே: ஒரு காலத்தில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்தியாவை சேர்ந்த தங்க மகன் ஒருவருடைய கதை இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
புனேவை சேர்ந்தவர் தத்தா புக்கே. 2013ல் இவர் உலகம் முழுக்க கவனம் பெற்றார். காரணம் இவர் வாங்கிய தங்கத்தால் ஆன உடை.
2013ல் இவர் தங்கத்தை வைத்து செய்யப்பட்ட உடையை வாங்கினார். இது முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன, லேசான கலப்பு கொண்ட தங்க சட்டை ஆகும்.
தங்கம்
மொத்தம் 4 கிலோ தங்கத்தை வைத்து அவர் இந்த சட்டையை உருவாக்கி இருந்தார். இதன் இப்போதைய மதிப்பு மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் ஆகும். பார்க்க சாதாரண மஞ்சள் சட்டை போலவே இது இருக்கும். ஆனால் உற்றுப்பார்த்தால்தான் இது தங்கம் என்பதே தெரியும். இதை அணிந்து கொண்டு இவர் நடந்த வீடியோ இணையம் முழுக்க அப்போது வைரலானது. பலரையும் இந்த தங்க மகன் அப்போது திரும்பி பார்க்க வைத்தார்.

யார் இவர்?
சர்வதேச செய்தி நிறுவனங்கள் பல இவரை பற்றி செய்தி வெளியிட்டன. அதோடு அப்போதே இவர் தங்க மகன் என்றும் அழைக்கப்பட்டார். கந்துவட்டி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை இவர் நடத்தி வந்தார். Vakratund Chit Fund Pvt. Ltd என்ற நிறுவனத்தையும் இவர் நடத்தி வந்தார். பலருக்கு அதிக அளவில் கடன் கொடுத்து, வட்டி மூலம் இவர் முன்னேறியதாக கூறப்படுகிறது. சிலரை ஏமாற்றியதாகவும் இவர் மீது புகார்கள் உள்ளன.

தங்க சட்டை
இவர் தங்க சட்டை மட்டுமின்றி தங்கத்தால் ஆன பல்வேறு ஆபரணங்களையும் தத்தா புக்கே அணிந்து வந்தார். இவர் கழுத்து முழுக்க தங்க சங்கிலிகள் இருக்கும். அதேபோல் கையில் நிறைய பிரேஸ்லெட் இருக்கும். அதேபோல் தத்தா புக்கே தங்கத்தால் ஆன மோதிரங்களை பத்து விரலிலும் அணிந்து இருந்தார். கிட்டத்தட்ட நடமாடும் நகைக்கடை போலவே தத்தா புக்கே வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி நிறுவனங்கள்
இது குறித்து அப்போதே செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்து இருந்த தத்தா புக்கே, நான் ஏன் தங்கம் அணிகிறேன் என்று பலரும் கேட்கிறார்கள். இது என்னுடைய கனவு, எனக்கு தங்கம் பிடிக்கும். பலருக்கு கார், பைக் பிடிக்கும். ஆனால் எனக்கு தங்கம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தங்கத்தால் ஆன பொருட்களை அணிகிறேன். இந்த சட்டையை உருவாக்க வேண்டும் என்பது பல நாள் கனவு, என்று தத்தா புக்கே குறிப்பிட்டு இருந்தார்.

கின்னஸ்
இவரின் உடை காரணமாக கின்னஸ் சாதனையிலும் கூட இடம்பிடித்தார். இப்படி பிரபலமாக இருந்த தத்தா புக்கே 2016ல் கொலை செய்யப்பட்டார். ஆம் 2016 ஜூலை மாதம் இவர் ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இவரின் நண்பர் ஒருவர் தத்தா புக்கேவை பார்ட்டிக்கு அழைக்க தத்தா புக்கே அந்த நிகழ்விற்கு சென்றார். அப்போது அவரை கத்தி, கடப்பாரை போன்ற மோசமான ஆயுதங்களை வைத்து ஒரு கும்பல் அடித்து கொண்டது.

விளக்கம்
பண ரீதியான மோதல் காரணமாக தத்தா புக்கே அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தத்தா புக்கேவுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட ஒரு பிஸ்னஸ்மேன் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்துதான் இந்த கொலையை செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டு அப்போதே சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தனை வருடங்கள் ஆகி தற்போது மீண்டும் இவரின் கதை இணையத்தில் உலாவி வருகிறது.

மரணம்
தங்கத்தோடு வாழ்ந்து.. தக தகவென மின்னிய நபர் நடுரோட்டில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது நாட்டையே உள்ளாக்கியது. அவ்வளவு தங்கம் இருந்து அன்றும் அவருக்கு உதவ ஒரு ஜீவன் கூட வரவில்லை.. ம்ம்ம் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள.. தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே என்று படையப்பா பட பாடலில் வருவது உண்மைதான் போல!