புதுடெல்லி: CAA-க்கு எதிரான அனைத்து மனுக்களும் அக்டோபர் 31-ம் தேதி 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கரோனா பெருந்தொற்று காரணமாக விசாரணை தடைபட்டு வந்த நிலையில், பல மாத இடைவெளிக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும், வரும் அக்டோபர் 31-ம் தேதி மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், இந்த வழக்கில் உள்ள சிக்கல்கள், இந்தச் சட்டத்திற்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகள், இதில் உள்ள பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கின் பின்னணியை தெளிவாக வரையறுத்து தெரிவிக்குமாறு, மத்திய அரசு உள்பட வழக்கில் தொடர்புடைய தரப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அஸ்ஸாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் (NRC), குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) இணைக்கும் மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய இஸ்லாமியர்கள் அல்லாத ஆறு மதங்களைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி இருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
இந்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட 3 அண்டை நாடுகளில் இருந்து வந்த மதச் சிறுபான்மையினரை பாதுகாக்கும் நோக்கிலேயே 1955-ம் ஆண்டின் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் மனுக்களும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாக உச்ச நீதிமன்றம் முன்னதாக முறையான அறிவிப்பை வெளியிட்டது.
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து குடியுரிமை வழங்கக் கூடியதாகவும், இஸ்லாமியர்களை திட்டவட்டமாக விலக்கக் கூடியதாகவும் இந்த திருத்தச் சட்டம் உள்ளதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அரசியலமைப்பின் அடிப்படைக் கூறுகளான மதச்சார்பின்மை, சமத்துவத்திற்கான உரிமை, கண்ணியம் ஆகியவற்றுக்கு இந்தச் சட்டம் எதிரானது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.