வந்துட்டான்யா வந்துட்டான்யா, மாப்பு வெச்சிட்டான்டா ஆப்பு, நா அப்படியே ஷாக் ஆயிட்டேன், U go man Why me…….இன்னும் எத்தனையோ வசனங்கள், உச்சரிப்புகள், சத்தங்கள், உடல்மொழிகள் ஆகியவை தமிழ்நாட்டு மக்களின் அன்றாட தினசரிகளில் புழுங்குகின்றன. நகைச்சுவை, குணச்சித்தர நடிகர் என்றெல்லாம் தாண்டி, சமூக மாற்றத்தில் வடிவேலுவின் பங்கு மகத்தானது. நடிப்பதைத் தவிர அப்படி அவர் என்ன செய்துவிட்டார் ?!
90 களுக்குப் பிறகான காலகட்டத்தில் சினிமாவின் பாதிப்பில், பல மாணவர்கள் இளம்பருவத்திலேயே தங்களை ரவுடிகளாக நினைத்துக் கொண்ட சூழல் இருந்தது. இந்த வியாதியில் கிட்டத்திட்ட பலர் சிக்கி, உடல்மொழிகளையே மாற்றி, தங்கள் எதிர்காலத்தை மெல்ல அழித்துக் கொண்டிருந்தனர். ரவுடிகள் என்றால் அசல் அல்ல. போலி. அதாவது, பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஒரு பாவ்லா. அதேபோன்று, கல்லூரிகளிலும், தெருக்களிலும் இதே கதைதான். இதுமாதிரியான மாணவர்களாலும், மனிதர்களாலும் பிற மாணவர்களும், மக்களும் இன்னல்களுக்கு ஆளாகும் நிலை இருந்தது.
இதுமாதிரியான சூழலில், 2003ம் ஆண்டு வெளியான வின்னர் திரைப்படம் இந்த மனிதர்களின் ‘கெத்தை’ தவிடுபொடியாக்கியது. ரவுடிகளாக தங்களை நினைத்துக் கொள்ளும் மாணவர்களை சமாளிக்க முடியாமல் புழுங்கும் பலருக்கு ‘கைப்புள்ள’ ஆறுதல் அளித்தான். அதுமட்டுமல்ல, தங்களை ரவுடிகளாக நினைத்துக் கொண்ட பலரின் முகத்திரைகளையும் கிழித்துத் தொங்கப் போட்ட பெருமையும் ‘கைப்புள்ளைக்கு’ உண்டு.! ‘இன்னுமாடா இந்த ஊர் நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’ என்ற வசனத்தை அந்த மாணவர்கள் வாயாலேயே சொல்ல வைத்ததை சமூக மாற்றம் என்ற சொல்லையல்லாமல் வேறு எதைக்கொண்டு நிரப்புவது!
இதுமட்டுமா. அதிகம் பொய் சொல்லியே காலத்தை ஓட்டுபவர்களுக்காக, ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தின் ‘சிங் இன் தி ரெய்ன்’ பாடல் பாடியபடி கலாய்த்த ‘ஸ்டீவ் வாஹ்’ வடிவேலுவாகட்டும், வெளிநாடு சென்றுவிட்டு வந்து பெருமை பேசும் அன்பர்களின் முகத்திரையைக் கிழிக்க ‘துபாயா…ஷார்ஜாவா…பெக்ரினா…’ என செண்ட் அடித்துக் கொண்டு ஒட்டகப்பாலில் டீ கேட்கும் வடிவேலுவாகட்டும், இருக்குறத விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படும் ஆசாமிகளுக்காக ‘நாய் சேகராக’ வலம் வந்த வடிவேலுவாகட்டும், இன்னும் எத்தனையோ வடிவேலுக்களை இப்போதுவரை மறக்க முடியுமா என்ன?
வாழ்வின் அன்றாட தருணங்களில் தன்னை பெருமையாக முன்னிறுத்தும் மனிதர்கள், அதிகம் பொய் பேசும் நபர்கள், வெளிநாட்டு பயணம் போய்விட்டு வந்து உளறும் ஆசாமிகள், இப்படி எத்தனையோ வகைவகையான மனிதர்களை கிண்டலடிப்பதற்கான வசனங்களையும், சத்தங்களையும், உடல்மொழிகளையும் தமிழ்நாட்டுக்கு அளித்திருப்பதே வடிவேலு கொடுத்த கலைக் கொடை.
இதில், என்ன ஸ்பெஷல் என்றால், இதுமாதிரியான குணங்கள் காலத்துக்கும் மனிதர்களுக்குள் இருப்பவை. அவை இருக்கும்போதெல்லாம் சகட்டுமேனிக்கு கிண்டல்களும், வசனங்களும் எழத்தானே செய்யும். அப்போதெல்லாம் வடிவேலு என்னும் அற்புதக் கலைஞன் வாழ்ந்துகொண்டே இருப்பான்.
அடுத்தடுத்த தலைமுறைக்கு தன் சத்தங்களையும், வசனங்களையும் வெகு இயல்பாக அன்றாட தினசரிகளில் சொருகும் வித்தை அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் போன தலைமுறையில் இருந்து இப்போதைய தலைமுறை தொடர்ந்து, நாளைய தலைமுறையான குழந்தைகள் வரை வடிவேல் பரவிக் கிடக்கிறார். ‘தலைவன்’ என அன்போடு அழைத்துக் கொண்டாடுகிறார்கள் அவரை.
இப்போதுள்ள பரபரக்கும் அவசர வாழ்க்கையில் எத்தனையோ நெருக்கடிகள், உளச் சிக்கல்கள். அதற்கும்கூட வடிவேலு என்னும் கலைஞனே தோள்கொடுக்கிறான். எல்லாவற்றுக்கும் வடிவேலுதான். இவ்வளவு ஏன் ? கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கணியூர் ஊராட்சியில் குப்பையை கொட்ட வேண்டாம் என்று மக்களிடம் எவ்வளவோ கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மும்மதங்களின் கடவுள்கள் வைத்தும் பயனில்லை. குப்பை மட்டும் வந்துகொண்டேயிருந்தன.
வடிவேலுவின் பேனர் ஒன்றை வைத்து, ‘இந்த இடத்துக்கு நீயும் குப்பைக் கொட்ட வரக்கூடாது. நானும் வரமாட்டேன்’ என்று எழுதியதுதான். சிரித்தபடி, குப்பைக் கொட்டாமல் மக்கள் கடந்துசெல்வதையெல்லாம் என்னவென்று சொல்வது.
அன்றாடங்களில் வடிவேலுவின் பங்கு மகத்தானது. சந்தோஷமான உணர்வா, ‘உன்ன யாரும் அசைக்க முடியாதுடா சூனா பானா’ என்கிறார்கள். விரக்தியான மன நிலையா, ‘நம்ம வாழ்க்கை எத நோக்கி போயிட்டு இருக்குன்னே தெரிலயே’ என்று ‘உச்’ கொட்டுகிறார்கள். மனக்குழப்பமா, ‘என்ன இங்கேயே இருக்கலாமா…இல்ல துபாய், கிபாய் போகலாமா’ என்று சொல்லி புலம்புகிறார்கள். இதெல்லாம் வெகு சாதாரணமாகத் தெரிவதுமாதிரி தெரியும்.
உற்றுநோக்கினால், துயரத்தைக் கொண்டாட்டமாக கடக்கும் மனநிலைக்கான படைப்புகள் உலகெங்கிலும் கொண்டாட்டப்பட்டு வரும் சூழலில், வெறும் வசனங்கள் மூலமாகவே நம் துயரங்களை போகிற போக்கில் கொண்டாட்டமாக கடக்க உதவும் ‘வடிவேலு’ நிச்சயமாக நமக்கு மகா கலைஞன்தானே.!
சுயத்தை அழித்தல் என்பது மாபெரும் கலை என்கிறார்கள். நம் குறைகளை கணக்கிட்டு வெளிப்படையாக அறிவிக்கும் ஓர் எண்ணமும், தைரியமும் ‘நான் ஒரு டம்மி பீஸுங்க’ என்ற வசனத்தின் மூலம் ஒளிந்து வெளிப்படுவது உண்மைதானே. ‘நாங்களாம் அடிவாங்காத ஏரியாவே கெடையாது’ என்ற வரிகளை வெறுமனே அடி வாங்குவதோடு மட்டும் பொருத்திக் கொள்ள முடியுமா என்ன ?
எந்தப் பாடலை எடுத்தாலும் அதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளிலும் வடிவேலுவின் நடிப்பு பொருந்திப் போகிற வீடியோக்களைப் போல, நம் அன்றாடங்களின் பல தருணங்களில் வடிவேலுவின் வசனங்கள் பொருந்திப் போகின்றன. கொஞ்சம் மிகையாக சொன்னால் ஓர் உளவியல் மருத்துவரைப் போல, மனதை இலகுவாக்கி குதூகலமாக்கும் விந்தை வடிவேலுவிடம் இருக்கிறது. வெள்ளித்திரையில் சில ஆண்டுகள் அவர் தென்படாமல் இருக்கலாம். ட்ரெண்டிங்கில் அவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எது ட்ரெண்ட் என்பதை ‘அவர்’ மூலமாகவே நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.
இப்போது, வைகைப்புயலுக்கு 62வது வயது. அவரது வசனத்தைத் திருடியே, அவருக்கு வாழ்த்துச் சொல்வதைவிட வேறு என்ன இருந்துவிடப்போகிறது.
‘அப்பனே விநாயகா. இன்னிக்கி எங்க தலைவனுக்கு பொறந்த நாளு. நீண்ட ஆரோக்கியத்தோட அவர் வாழணும். இது எங்க உத்தரவு. மீறுன….கடுப்பாயிருவோம்.!’
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ