சென்னை : கோலிவுட்டில் பிரபலமான செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டித்துள்ளன.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நானே வருவேன் படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தற்போது நானே வருவேன் திரைப்படம் குறித்த முக்கியமானத் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தனுஷ்
தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் செம ஹிட்டாகி வசூலை குவித்து வருகிறது. இதனால் அவரின் அடுத்த படமான நானே வருவேன் மீது எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. தனுஷிற்காகவே செல்வராகவன் உருவாக்கிய கதை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் என்பதாலும் நானே வருவேனுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தனுஷ்-செல்வராகவன்
அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் Elli AvrRam மற்றும் இந்துஜா என இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். பீஸ்ட், சாணிகாயிதம் படங்களைத் தொடர்ந்து நானே வருவேன் படத்திலும் மிக முக்கியமான ரோலில் செல்வராகவன் நடித்துள்ளார். இதனால் தனுஷ்- செல்வராகவன் இணைந்து திரையில் தோன்றும் சீன்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விரைவில் இரண்டு பாகம்
செல்வராகவன் ஏற்கனவே, தனுஷை வைத்து புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நானே வருவேன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க செல்வராகவன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

டீசர் ரிலீஸ் தேதி
இந்நிலையில், நானே வருவேன் டீசர் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், வரும் 15ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து படத்தின் புதிய போஸ்டரை ஷேர் செய்துள்ளார். இம்மாதம் இப்படம் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு டீசரில் வெளியாகும் என நம்பப்படுகிறது.