அகமதாபாத்: 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ”காங்கிரஸ் முடிந்து விட்டது.. அவர்களின் கேள்வியை நிறுத்துங்கள்” என்று கூறினார்.
குஜராத் மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த முறை நாம் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் அத்மி கட்சிகள் தற்போதே அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஏற்கனவே குஜராத்தில் 24 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்து விடுவதில் விடாப்பிடியாக உள்ளது.
குஜராத் தேர்தல்
காங்கிரஸ் கட்சியும் தொடர் தோல்விகளால் துவண்டு போயிள்ளதாலும், இந்த முறை குஜராத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என முனைப்பு காட்டும். இதற்கிடையே டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவல் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளதால் தனது அடுத்த ஏம் ஆக குஜராத்தை குறி வைத்துள்ளது. இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரம்
தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது, பிரசாரத்தில் ஈடுபடுவது என இப்போதே தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். குறிப்பாக ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளித்தால் ஏராளமான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படும் என்று பல வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆட்டோ டிரைவர் வீட்டில் உணவு
இந்த நிலையில் மீண்டும் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று அகமதாபாத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவாலிடம், அகமதாபாத் நகரை சேர்ந்த விக்ரம் தண்டானி என்ற ஏழை ஆட்டோ டிரைவர் சந்தித்து இன்று(அதாவது நேற்று) தனது வீட்டிற்கு இரவு உணவு அருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று அவரது வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் இரவு உணவு அருந்தினார்.
காங்கிரஸ் முடிந்து விட்டது
இந்த நிலையில், இன்று அகமதாபாத் நகரில் தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு கெஜ்ரிவால் பதிலளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்டார். அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், ”காங்கிரஸ் முடிந்து விட்டது. அவர்களின் கேள்வியை நிறுத்துங்கள்..” என்றார்.