அமித் ஷாவுக்கு அண்ணாமலை எழுதிய ரகசிய கடிதம்… திமுக முக்கிய புள்ளிகளை குறிவைக்கும் என்ஐஏ!

குட்கா, பான்மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்தே இந்த தடை அமலில் இருந்தாலும் இன்றைக்கும் மாநிலத்தில் பரவலாக அனைத்து இடங்களில் போதைப்பொருட்கள் கிடைத்துக் கொண்டுதான் உள்ளன. அதுவும் பள்ளி, கல்லூரி வளாகங்கள், லிடுதிகளில் போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கி வருவதால் இளைய சமுதாயமே சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகததில் இன்றைக்கு மிகப்பெரிய சமூக பிரச்னையாக உருவெடுத்துள்ள போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை அண்மையில் சென்னைக்கு அழைத்து தீவிர ஆலோசனை நடத்தியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தின் எதிரொலியாக, ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கைளில் தீவிரமாக இறங்கி உள்ளது தமிழக காவல் துறை.

போதைப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் செய்வர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதுடன், அவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது, போதைப்பொருட்களை சில்லறை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், கடை உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது தமிழ்நாடு போலீஸ்.

காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணமையில் எழுதியுள்ள கடிதம்தான் டெல்லி உள்துறை அமைச்சக வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் சரளமாக புழங்குவதற்கு என்ன காரணம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை வஸ்துக்கள் எப்படி சர்வசாதாரணமாக கிடைக்கின்றன, கடந்த ஓராண்டில் அதாவது திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போதைப் பொருட்களின் விற்பனை எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து, அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டுள்ளாராம் அண்ணாமலை.

இவற்றைவிட முக்கியமாக, முக்கிய அரசியல் பிரமுகர்களின் உறவினர்கள் போதைப்பொருட்கள் விற்பனையில் எப்படி மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்த விவரங்களை விரிவாக தமது கடிதத்தில் அண்ணாமலை எடுத்துரைத்துள்ளாராம்.

அண்ணாமலையின் இந்த ரகசிய கடிதத்தில இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புடன் விரைவில் பகிரப்படும் எனவும், அதனடிப்படையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை குறிவைத்து, போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக என்ஐஏ விரைவில் அதிரடி விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கின்றன மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக, அதாவது அதிமுக ஆட்சியில் இவற்றின் விற்பனை அதிகரித்ததாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிவரும் நிலையில், கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் விற்பனை கூடி உள்ளதாக மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.