வாஷிங்டன்: அமெரிக்காவில் நகைகளைக் கொள்ளையடிக்க வந்த நபரால், பிரபல பாப் பாடகர் பிஎன்பி ராக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராப் உலகில் அறியப்படும் பெயர்களில் ஒருவர் பிஎன்பி ராக் (30). இவருடைய “Catch These Vibes” & “TrapStar Turnt PopStar” ஆகிய பாடல்கள் மிக பிரபலமானவை. லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ள உணவு விடுதிக்கு நேற்று தனது காதலியுடன் பி ராக் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பி ராக்கின் நகைகளையும், ஆடம்பர பொருள்களையும் கேட்டு துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். இதில் அந்த நபருக்கும், பி ராக்குக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நபர், பி ராக்கை துப்பாக்கியால் சுட்டத்தில் பி ராக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்ந்தார்.
இதுகுறித்து பி ராக்கின் காதலி கூறும்போது, “அந்த நபர் பி ராக்கை தாக்கி துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அங்கிருந்து வெளியேறி காரில் ஏறி தப்பிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
பி ராக் அணிந்திருந்த நகைகளுக்காகவே இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தாங்கள் இருந்த உணவு விடுதியின் பெயருடன் (location) பிராக்கும் அவரது காதலியும் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை வைத்துதான் அந்தக் கொலையாளி, பிராக் இருந்த உணவு விடுதிக்கு சென்று கொள்ளையில் ஈடுபட முயன்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பி ராக்கின் மறைவுக்கு ராப் இசை உலகப் பிரபலங்களும், அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.