வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அம்மா… கொஞ்சம் காபி குடிக்கிறியா?? என சத்தம் எங்கிருந்தோ வருவது போல் இருக்கவே,, கண்ணைத் திறந்து பார்த்தேன். என்ன நேரம்?,, என்ன மாதம்?? ஒன்றும் புரியவில்லை. கண்ணை இருபுறமும் திருப்பிப் பார்த்தேன். என்னருகில் ஒரு உருவம்..யாரு?? எனக் கேட்டேன். நான்தான் உன் பையன்.. காபி குடிக்கிறியா? மறுபடியும் ஒலித்தது.. வேண்டாம் எனக் கூற நா எழவில்லை. தலையை அசைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. எழுந்து உட்கார்ந்து, காலை தரையில் ஊன்ற வேண்டும் என நினைக்கிறேன். முடியாது எனப் புரிந்தாலும் , ஆசையாக இருக்கிறது. எத்தனை மாதங்கள் ஆகிறது?? நான் ஏன் இந்தப் படுக்கையிலேயே கிடக்கிறேன்? பசி இல்லை. தாகம் எடுக்கிறது. ஒரு தேக்கரண்டி தண்ணீர் உள்ளே செல்வது , ஒரு குடம் தண்ணீர் உள்ளே செல்வது போல இருக்கிறது. மகனின் பெயர் அடிக்கடி மறந்து போகிறது.

யார் யாரோ வருகிறார்கள்..ஏதேதோ பேசுகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் யார் என தங்களை அறிமுகம் செய்தபின், நினைவினில் அவர்கள் வர, அடுத்த நொடி மறந்து விடுகிறது. அவர்களின் இப்போதைய தோற்றத்திற்கும், என் மனதில் இருக்கும் அவர்களின் தோற்றத்திற்கும் நிறைய மாறுபாடுகள். என் பேத்தி என ஒருத்தி வருகிறாள். பள்ளிக்கூடம் போகிறாயா எனக் கேட்டால், சிரித்து விட்டு, தன் மகனே கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறான் எனக் கூறுகிறாள். நீ யாரு பொண்ணு என்றால், என் மகளின் பெயரைச் சொல்லி, தான் அவளின் மகள் என்கிறாள். என் மகள் எங்கே என்று கேட்டால்,,, இறைவனிடம் சேர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்கிறாள்.
எனக்கோ என் மகள் இப்போதுதான் திருமணமாகி அவள் புகுந்த வீட்டுக்கு போன ஞாபகம். இவள் ஏதேதோ சொல்கிறாளே எனத் தோன்றியது. என் மகள் வேலைக்குச் செல்பவள்.. அவள் வீடு, குடும்பம் என இருப்பதால் என்னைப் பார்க்க வர அவளுக்கு நேரமே இல்லை என நினைத்தேன். என் மருமகள் என்னிடம் வந்து குட்மார்னிங் என்கிறாள்.. இது இரவு என அவளிடம் வாதிடுகிறேன். காலை மாலை என ஒரு இளம்பெண் வந்து என்னை சுத்தம் செய்து ஆடை மாற்றி விடுகிறாள். அவளிடமும் கெஞ்சிக் கேட்கிறேன்..என்னை பாத்ரூம் இருக்கும் இடத்திற்கு கூட்டிச் செல் என ..அவளும் நாளைக்கு நாளைக்கு என பதிலளித்து தப்பித்துக் கொள்கிறாள். ஏனோ அடிக்கடி சிறுவயது ஞாபகங்கள் வந்து போகிறது.

எட்டு வயதில் கற்றப் பாடல் இப்போது முழுமையாக சரியாக பாடுகிறேன். பக்கத்தில் யாராவது இருந்தால் சிரிக்கிறார்கள். அதுவும் அவர்கள் சத்தமாக சிரித்தால் தான் என் காதில் விழும்.இறைவனை வேண்டிக் கொண்டே இருக்கின்றேன். செய்த பாவம் என்ன? ஏன் இந்த படுக்கை மீதான வாழ்க்கை?? என் கணவன் எங்கே?? யாருக்கும் தொந்தரவு அளிக்காமல் இந்த பிறவியை முடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேனே,,,ஆனால் அது நடந்தேறவில்லை. தினம் தினம் யார் யாரோ வருகிறார்கள்.. என்னிடம் வந்து அவர்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அவர்களைப் பார்த்து இறைவன் அருளால் நலமாக இருங்கள் எனக் கூறுவதைத் தவிர, என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை. நான் ஏதாவது கூறினால்..வருபவர்கள் எனக்கு வயது நூறை நெருங்குகிறது.. இந்த வயது வரை நான் இருப்பதே பெரிய விஷயமாக கூறுகிறார்கள்.
அவர்கள் கூறுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனோ எனக்கு இப்போது தான் ஐம்பது வயது போலவும், என் மகள்கள் ஒவ்வொருவருக்கும் திருமணம் செய்து முடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நான் இருப்பது போலவும் இருக்கிறது.என்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பவற்றை பார்க்கவோ, அதில் கலந்து கொள்ளவோ முடியாமல் காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பது மிகப் பெரிய வருத்தமளிக்கிறது. சிறுவயதில், பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்., நம்மைச் சுற்றி தேவதைகள் இருப்பார்கள் என..அந்தத் தேவைதகளிடம்…மன்றாடிக் கொண்டே இருக்கின்றேன்….என்னை வானில் ஏற்றி விட வாருங்கள்…என !
-Vinu Shahapuram