புதுடில்லி, கொரோனா தொற்று பரவலின் போது, ஆக்சிஜன் தட்டுப்பாடால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மாநில அரசுகளின் உதவியுடன் தணிக்கை செய்து முறையாக ஆவணப்படுத்த, மத்திய சுகாதாரத்துறைக்கு பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. கடும் விளைவுமத்திய சுகாதாரத்துறைக்கான பார்லி., நிலைக்குழு தன், 137வது அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது.
அதன் விபரம்:கொரோனா தொற்று பரவலின் போது, குறிப்பாக இரண்டாம் அலையின் போது தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதும், நம் சுகாதார கட்டமைப்புக்கு அழுத்தம் அதிகரிக்க துவங்கியது.பார்லி., நிலைக்குழுவின் 123வது அறிக்கையிலேயே, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து இருந்தோம். ஆனால், ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேவை அதிகரித்ததும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இரண்டாம் அலையின் போது, வைரஸ் உருமாற்றத்தை முன்னரே கணித்து, தொற்று பரவலை கண்டறிந்து, அதை கட்டுக்குள் கொண்டு வரும் பணியை இன்னும் விரைவாக செய்திருந்தால் கடும் விளைவுகளை தவிர்த்து இருக்க முடியும்.தணிக்கைஆக்சிஜன் தட்டுப்பாடால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
அதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழப்பு நிகழ்ந்ததாக ஒரு மாநிலமும் குறிப்பிடவில்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மறுப்பது முறையல்ல. எனவே, மாநில அரசுகளின் உதவியுடன், ஆக்சிஜன் தட்டுப்பாடால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தணிக்கை செய்து, உண்மையான எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை ஆவணப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement